‘நான் கிறிஸ்தவ மதத்தில் சேரவில்லை’ வைகோ பேட்டி


‘நான் கிறிஸ்தவ மதத்தில் சேரவில்லை’ வைகோ பேட்டி
x
தினத்தந்தி 8 Nov 2017 10:15 PM GMT (Updated: 8 Nov 2017 7:12 PM GMT)

தன்னுடைய வாழ்வில் எந்த மதத்தையும் விமர்சித்து பேசவில்லை என்றும், கிறிஸ்தவ மதத்தில் தான் சேரவில்லை என்றும் வைகோ கூறினார்.

சென்னை,

கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் சமீபத்தில் நடந்த ஒரு ஜெபக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், அவருடைய குடும்பமும் இயேசுவை விசுவாசிப்பதாக கூறினார். அந்த வீடியோ வாட்ஸ் அப் மூலம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மதபோதகர் மோகன் சி.லாசரஸ் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர் வைகோவின் மனைவி, அவருடைய பிள்ளை ரட்சிக்கப்பட்டு ஆலயத்தில் ஞானஸ்தானம் எடுத்து விட்டார்கள். ஆலயத்துக்கும் தவறாமல் செல்கிறார்கள். வைகோ ஒரு கட்சி தலைவராக இருப்பதால் திறந்த மனதோடு இன்னும் அவர் அறிவிக்கவில்லை.

இயேசுவை விசுவாசித்து ஒரு நாளைக்கு 2 முறை பைபிள் வாசிக்கிறார். காலையிலும், இரவிலும் பைபிள் வாசிப்பேன் என்று என்னிடம் சொன்னார். எப்படி ஜெபிக்க வேண்டும்? என்று என்னிடம் கேட்டார். அதுகுறித்து அவரிடம் நான் விளக்கினேன். அதன்படி செய்கிறேன் என்று சொன்னார். இயேசுவை நேசித்து அவர் சொல்வதை கேட்கிற ஒரு கட்சி தலைவர் நமக்கு இருக்கிறார். வைகோவின் மகளும், மருமகனும் அமெரிக்காவில் ஊழியம் செய்கிறார்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மதபோதகரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் தினத்தந்தி நிருபர் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

அந்த கிறிஸ்தவ மத போதகர் மீது நான் மிகுந்த மரியாதை கொண்டவன். அவர் என்னைப் பற்றி கூறியதற்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

என்னுடைய குடும்பத்தில் என்னுடைய மகள்-மருமகன் கிறிஸ்தவ மதத்தில் இருக்கிறார்கள். மூத்த சகோதரி கிறிஸ்தவ மத நம்பிக்கை உடையவர். என்னை பொறுத்தவரையில் நான் கிறிஸ்தவ மதத்தில் சேரவும் இல்லை, நான் கிறிஸ்தவனும் அல்ல. ஆனால் மனித வாழ்வை நெறிப்படுத்தும் அனைத்து மதங்களின் அற நூல்களையும் படித்து இருக்கிறேன். அதனை மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

தேவாரம், சைவ சமயத்தையும், வைணவ ஆழ்வார்கள் தமிழுக்கு செய்துள்ள தொண்டினையும், கிறிஸ்தவ பாதிரியார்கள் தமிழுக்கு செய்த தொண்டினையும் என் உரையில் குறிப்பிட்டுள்ளேன். இது மட்டுமல்ல நான் தினமும் திருக்குறள் படிக்கிறேன்.

என்னுடைய உரையிலேயே அதிகமாக மக்களை கவர்ந்தது இளையராஜா சிம்பொனி விழாவில் நான் ஆற்றிய திருவாசகம் உரை தான். அதேபோல் சேக்கிழார் பாடல்களையும், திருப்பாவை பாசுரத்தையும் பல இடங்களிலும் மேற்கோள் காட்டியிருக்கிறேன். இஸ்லாமியர்களின் திருக்குரானையும் மேற்கோள் காட்டுவேன்.

கோவிலை பராமரிக்கிறோம்

என்னுடைய பாட்டனார் எங்கள் ஊர் ஊராட்சி எல்லைக்குள் 97 ஆண்டுக்கு முன்பு கட்டிய சுந்தரராஜ பெருமாள், ஈஸ்வரன் கோவில் ஆகிய 2 கோவில்களையும் நானும், என் தம்பியும் தான் பராமரித்து வருகிறோம். எங்கள் கலிங்கப்பட்டியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு பெருமளவு தொகையை எங்கள் குடும்பம் அளித்து கோபுரம் அமைத்து கொடுத்து இருக்கிறோம்.

கடந்த நவம்பர் 2-ந்தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த எனது உதவியாளர் ராமைய்யாவின் திருமண விழாவில் கலந்து கொண்டு இருக்கிறேன். சட்டை அணியாமல் முருகன் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்தினேன்.

கிறிஸ்தவ மதத்தில் சேரவில்லை

கலிங்கப்பட்டியில் உள்ள எனது வீட்டு பூஜையறையில் முருகன், அம்மன் உள்ளிட்ட கடவுள்களின் படங்கள் இருக்கும். எனது தாயார் இருந்தவரை அதற்கு பூஜை செய்து எனக்கு நெற்றியில் திருநீர் இடுவார். சென்னையில் உள்ள வீட்டில் பூஜையறையில் எனது மருமகள் அனைத்து இந்து கடவுள்களின் படங்களையும் வைத்து பூஜை செய்கிறார்.

என்னுடைய மனைவி கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்று வருவார். நான் எந்த மதத்தினரையும் அவர்களின் வழிபாட்டையும் விமர்சித்தோ, புண்படுத்தியோ என்றைக்கும் பேசியது கிடையாது. நான் கிறிஸ்தவ மதத்தில் சேரவும் இல்லை. திருக்குறளை படிப்பது போல, பைபிள், திருக்குரானையும் படிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story