சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு பார்வையாளர்கள் அனுமதி ரத்து


சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு பார்வையாளர்கள் அனுமதி ரத்து
x
தினத்தந்தி 20 Jan 2018 8:54 PM GMT (Updated: 20 Jan 2018 8:54 PM GMT)

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #RepublicDay

ஆலந்தூர், 

இந்தியாவில் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வருகிற 30-ந்தேதி நள்ளிரவு வரை விமான நிலையங்களில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

7 அடுக்கு பாதுகாப்பு

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

விமான நிலைய போலீசார், மத்திய தொழிற்படையினர், பாதுகாப்பு படையினர் கொண்ட கூட்டு பாதுகாப்பு பணி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையத்தின் உள் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா மூலம் மத்திய தொழிற்படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தீவிர சோதனை

விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் நுழைவு பகுதியில் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் வாகனங்களை போலீசார் தீவிரசோதனை செய்து அனுமதிக்கின்றனர்.

விமான நிலையத்துக்குள் சந்தேகப்படும்படியாக ஏதாவது பொருட்கள் இருந்தால் அதைப்பற்றி போலீசாருக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story