திமுக முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்


திமுக முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 2 Oct 2021 5:13 AM GMT (Updated: 2 Oct 2021 5:13 AM GMT)

திமுகவில் தேர்தல் பணிக்குழு செயலாளரும் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுமான வீரபாண்டி ராஜா இன்று காலமானார்.

சென்னை,

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வீரபாண்டி ராஜேந்திரன் என்கிற ராஜா மாரடைப்பு காரணமாக சேலம் சீலநாயக்கன்பட்டி யில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.  இன்று அவரது பிறந்த நாள் கொண்டாட இருந்த நிலையில் பிறந்த நாளன்று அவர் இறந்த சம்பவம் திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவரது மறைவுக்கு  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சேலத்துச் சிங்கம் வீரபாண்டியாரின் மகனும் - சேலம் மண்டலத்தில் கழகம் வளர்க்கும் வீரனாகவும் வலம் வந்தவர் அருமைச் சகோதரர் வீரபாண்டி இராஜா அவர்கள். இனிமையாய் பழகியும் அருமையான குணத்தாலும் அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர் இராஜா. எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதனைத் திறம்பட செய்து முடிக்கக் கூடியவர்.

இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், மாவட்டச் செயலாளர், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எனக் கழகப் பொறுப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டதோடு சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியாற்றியவர் சகோதரர் இராஜா அவர்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் சேலத்துக்கு அரசு விழாவுக்குச் சென்றிருந்தபோதுகூட வீரபாண்டி இராஜாவைச் சந்தித்தேன். அன்போடு பேசிக் கொண்டு இருந்தேன். அந்த வெள்ளை உள்ளம் கொண்ட புன்சிரிப்பை மறக்க முடியவில்லை.

மிக இளமைக் காலத்தில் செழியனை இழந்தோம். மருத்துவமனை வாசலில் தலைவர் கலைஞர் அவர்களே வாய் விட்டுக் கதறும் அளவுக்கு நம்மை விட்டுப் பிரிந்தார் அண்ணன் வீரபாண்டியார். இதோ இப்போது வீரபாண்டி இராஜா. வீரபாண்டியார் குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது? என்னை நானே எப்படித் தேற்றிக் கொள்வது? வீரபாண்டி இராஜா போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல; தூண் சாய்வது போல!

எந்நாளும் அவர் புகழ் நிலைத்திருக்கும். கழகத் தொண்டர்கள் மனதில் எந்நாளும் இராஜா வாழ்வார். வீரபாண்டியார் குடும்பத்துக்கும் கழகச் செயல்வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story