குர்தாஸ்பூர் இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளார் பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

குர்தாஸ்பூர் இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரைவிட காங்கிரஸ் வேட்பாளர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்று உள்ளார்.
குர்தாஸ்பூர் இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளார் பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
Published on

குர்தாஸ்பூர்,

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி-யும் பாரதீய ஜனதாவின் மூத்த தலைவருமான வினோத் கண்ணா மரணமடைந்ததையடுத்து, காலியான அந்தத் தொகுதிக்கு 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 9 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 56 சதவித வாக்குகள் பதிவானது. கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில் இங்கு 70.3 சதவித வாக்குகள் பதிவாகியிருந்தது. மாநிலத்தில் புதியதாக ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு எப்படி உள்ளது என பார்க்கும் தேர்தலாகவும் இது இருந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. 11 வேட்பாளர்கள் களம் கண்டாலும் காங்கிரஸ், பாரதீய ஜனதா மற்றும் ஆம் ஆத்மி இடையேதான் போட்டி என பார்க்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே காங்கிரஸ் கட்சி முன்னிலை பிடித்தது. அடுத்தடுத்த கட்ட வாக்கு எண்ணிக்கையிலும் காங்கிரஸ் கட்சி தன்னுடைய முன்னிலை விகிதத்தை உயர்நிலையே கொண்டு செல்கிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்ட சுனில் ஜாகர் 1,08,230 வாக்குகள் முன்னிலை பெற்று உள்ளார். பாரதீய ஜனதா வேட்பாளர் ஸ்வாரன் சலாரியா இரண்டாவது இடத்தையும், ஆம் ஆத்மியின் வேட்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் காஜுரியா மூன்றாவது இடத்தையும் பிடித்து உள்ளார்.

பாதுகாப்புடன் தொடர்ச்சியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்று உள்ளநிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றியை கொண்டாட தொடங்கிவிட்டனர்.

காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாகர் பேசுகையில், குர்தாஸ்பூர் இடைத்தேர்தல் பிரதமர் மோடியின் கொள்கையின் மீதான மக்களின் கோபத்தை எடுத்துச் சென்று உள்ளது என கூறிஉள்ளார். பாரதீய ஜனதா வசம் இருந்த குர்தாஸ்பூர் தொகுதி காங்கிரஸ் வசம் செல்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com