பெங்களூருவில் 115 ஆண்டுக்குப்பின் வரலாறு காணாத மழை, ஒரேநாளில் 16.15 செ.மீட்டர் கொட்டியது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 115 ஆண்டுக்குப்பின் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்து உள்ளது.
பெங்களூருவில் 115 ஆண்டுக்குப்பின் வரலாறு காணாத மழை, ஒரேநாளில் 16.15 செ.மீட்டர் கொட்டியது
Published on

பெங்களூர்,

தென்மேற்கு பருவமழை காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த போதிலும், இன்னும் மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் கனமழை பெய்தது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்று, இடி-மின்னலுடன் கனமழை கடந்த 2 மாதங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 7 மணியளவில் பயங்கர இடி- மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் ஆக ஆக மழையின் வேகம் அதிகமானது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. பல்வேறு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெங்களூருவில் நேற்று பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் வீடுகளில் மழைநீர் புகுந்தது. பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

கர்நாடகாவில் தொடர்மழையால் மாநிலத்தின் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதே போல பெரும்பாலான பெரிய அணைகள் நிரம்பியிருப்பதுடன், சிறு சிறு அணைகளும் நிரம்பி வருகின்றன. அணைகள் நிரம்பிய அதே நேரத்தில் விவசயிகள் சாகுபடி செய்திருந்த விளைப்பயிர்கள் பெரும் அளவில் நீரில் மூழ்கி பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலைக் குள்ளாகியுள்ளனர்.

தொடர் மழையால் பல மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பெங்களூருவில் கடந்த 45 நாட்களாக கனமழை பெய்த வரும் நிலையில், மேலும் 3 நாட்களுக்கு மழை கொட்டும் என்ற வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் கனமழை காரணமாக ஆங்காங்கே மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தது. போக்குவரத்தும் முடங்கியது.

இந்த மழைக்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், சுவர் இடிந்தும், கால்வாயில் விழுந்தும் 9 பேர் பலியானார்கள். குறிப்பாக பெங்களூரின் மேற்கு பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. வெள்ளப்பகுதிகளை அரசியல் கட்சி தலைவர்கள் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். பெங்களூரில் 115 ஆண்டுக்குப்பின்பு வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 16.15 செ.மீ. மழை கொட்டியது. இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு 16.06 செ.மீ. மழை பெய்தது. இதுதான் அதிக பட்ச மழை அளவாக இருந்தது. அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கர்நாடகத்தின் உள்மாவட்டங்களிலும், பெங்களூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com