

இஸ்லாமாபாத்,
கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அணி இரு தரப்பு தொடரில் பங்கேற்கவில்லை. பயங்கரவாத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுடன் இப்போதைக்கு கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறிவிட்டது. இருதரப்பு போட்டிகள் நடைபெறாததால் பாகிஸ்தான் அணிக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2015-2023 ஆம் ஆண்டுகளில் 5 இரு தரப்பு தொடரில் விளையாட வேண்டும் என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் மீறிவிட்டதாகவும் இதன்காரணமாக 60 மில்லியன் டாலர் (தோராயமாக 387 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் கூறி வருகிறது.
இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் உலக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்ள தயார் என அறிவித்து உள்ளது. இருப்பினும் 2014-ம் ஆண்டு இருதரப்பு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் மதிக்கவேண்டும் என கூறிஉள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நாஜம் சைதி செய்தியாளர்களிடம் பேசுகையில், இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா நிறைவேற்றும் என்பதை உறுதி செய்தால் மட்டுமே ஐசிசி தொடரில் விளையாடுவது தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திடுவோம், என கூறிஉள்ளார்.