அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்


அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
x
தினத்தந்தி 22 Jan 2018 9:30 PM GMT (Updated: 22 Jan 2018 7:22 PM GMT)

வாஷிங்டனில் நடந்த பொங்கல் விழாவில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடலை அமைச்சர் கே.பாண்டியராஜன் வெளியிட்டார். #PongalFestival #UnitedStates

வாஷிங்டன்,

வாஷிங்டனில் நடந்த பொங்கல் விழாவில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடலை அமைச்சர் கே.பாண்டியராஜன் வெளியிட்டார்.

பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடினர். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி வாஷிங்டன் வட்டார தமிழ் சங்கத்தினர் பொங்கல் பண்டிகையின் சிறப்புகளையும், தமிழர்களின் பெருமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கிய பாடல் வெளியீட்டு விழா தமிழ்ச்சங்க அலுவலகத்தில் கடந்த 20-ந் தேதி நடந்தது. விழாவுக்கு சங்கத்தின் தலைவர் ராஜாராம் சீனுவாசன் தலைமை தாங்கினார்.

அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றிருந்த தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜனும் இவ்விழாவில் பங்கேற்றார். அவரும், அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தின் முன்னாள் வெளியுறவுத்துறை துணை செயலாளர் டாக்டர் ராஜன் நடராஜனும் இணைந்து பொங்கல் சிறப்பு பாடல் குறுந்தகட்டினை வெளியிட்டனர்.

அதனை தமிழ் திரைப்பட இயக்குனர் கே.பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணிமா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதுபற்றி வாஷிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகி ச.பார்த்தசாரதி கூறியதாவது:-

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் ஜனவரி 14-ந் தேதியை பொங்கல் தினமாக கொண்டாடுவதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பாடலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இந்த பாடலை என்னுடன் நியூஜெர்சியில் வசிக்கும் மணிகண்டன், ஆனந்தராஜ், வாஷிங்டனில் வசிக்கும் நித்திலச்செல்வன் முத்துசாமி, யோகராஜ் சொக்கலிங்கம், மகேந்திரன் பெரியசாமி, ராஜேஷ் சுவாமிநாதன், அய்யப்பன் ராமன் ஆகியோர் இணைந்து எழுதினர்.

நியூஜெர்சியை சேர்ந்த வசந்த் வசீகரன் குழுவினர் இசை அமைத்தனர். தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளனர். இந்த பாடலை www.va-l-a-it-a-m-il.com என்ற இணையதளத்தில் பார்த்து ரசிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story