எந்த ஒரு இளம் வீரரையும் தடுப்பவராக தோனி இருக்க மாட்டார்: விவிஎஸ் லட்சுமணுக்கு சேவாக் பதிலடி


எந்த ஒரு இளம் வீரரையும் தடுப்பவராக தோனி இருக்க மாட்டார்: விவிஎஸ் லட்சுமணுக்கு சேவாக் பதிலடி
x
தினத்தந்தி 7 Nov 2017 9:48 AM GMT (Updated: 7 Nov 2017 9:48 AM GMT)

எந்த ஒரு இளம் வீரரையும் தடுப்பவராக தோனி இருக்க மாட்டார் என்று விவிஎஸ் லட்சுமணுக்கு சேவாக் பதிலடி கொடுத்துள்ளார்.

புதுடெல்லி,

ராஜ்கோட்டில் கடந்த சனிக்கிழமை நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 197 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் டோனி 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து கடைசி ஒவரில் ஆட்டம் இழந்தார். ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் வல்லவர் என்று அனைவராலும் அறியப்பட்ட தோனி, கடைசி கட்டத்தில் பந்துகளை அடித்து ஆடுவதில் சிறிது தடுமாறினார். இதனால்,தோனிக்கு எதிராக சில விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமண், தோனியின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்து இருந்தார். விவிஎஸ் லட்சுமண் கூறுகையில், ”20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அடுத்த வாய்ப்பை தேட வேண்டிய தருணம் இதுவாகும். ஆட்ட இலக்குக்கு தகுந்தபடி டோனி அடித்து ஆடவில்லை. அவர் முதல் 9 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தார். அவரது நிதானமான ஆட்டத்தால் அணியின் உத்வேகம் நியூசிலாந்துக்கு சாதகமாக திரும்பியது.20 ஓவர் போட்டியில் டோனி இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். அதற்கு அவர் முன்வர வேண்டும்.  ஒருநாள் போட்டியை பொறுத்தமட்டில் டோனி நிச்சயம் அணியில் இடம் பெற வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார். அதேபோல், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகர்கரும் தோனியின் பேட்டிங் திறன் பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். 

இந்த நிலையில், விவிஎஸ் லட்சுமண் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் கூறியிருப்பதாவது:- “ இந்திய அணிக்கு தற்போது தோனி தேவை. 20 ஓவர் போட்டியிலும் தோனியின் பங்களிப்பு தேவைப்படுகிறது. தோனி சரியான நேரத்தில் ஓய்வு பற்றி அறிவிப்பார்.  எந்த ஒரு இளம் வீரருக்கான பாதையையும் தோனி தடுக்கமாட்டார். தோனிக்கு சரியான மாற்று வீரரை இந்திய அணி இன்னும் கண்டறியவில்லை” என்று தெரிவித்துள்ளார். அதேவேளையில், தோனிக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ள சேவாக், தோனி, அணியில் தனது பணி என்ன என்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும். பெரிய இலக்குகளை துரத்தும் போது, தோனி தனது ஆட்டத்தின் போக்கை ஆரம்பத்திலேயே மாற்ற வேண்டும். முதல் பந்தில் இருந்தே தோனி அடித்து ஆடவேண்டும்” என்று கூறி இருந்தார். 

Next Story