இதுதான் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பிரச்சினையாகும்... பாண்ட்யா விவகாரம் குறித்து வாசிம் அக்ரம் கருத்து


இதுதான் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பிரச்சினையாகும்... பாண்ட்யா விவகாரம் குறித்து வாசிம் அக்ரம் கருத்து
x

நடப்பு சீசனிலும் ரோகித் சர்மா மும்பை அணியின் கேப்டனாக இருந்திருக்கலாம் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

கராச்சி,

ஐ.பி.எல். வரலாற்றில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டனான பாண்ட்யா தலைமையில் நடப்பு சீசனில் தடுமாறி வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் 3-ல் மட்டுமே வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்ட்யாவின் மீது ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியிலும் கேலி, கிண்டல்கள் செய்வதை அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக பாண்ட்யா இந்தியாவின் எந்த மைதானத்தில் சென்று விளையாடினாலும் அவருக்கு எதிராக ரசிகர்கள் மைதானத்திலேயே கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நடப்பு சீசனிலும் ரோகித் சர்மா மும்பையின் கேப்டனாக இருந்திருக்கலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். அதே சமயம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவை ஏற்காமல் தங்களுடைய சொந்த வீரருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்திய ரசிகர்கள் மீது வாசிம் அக்ரம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு;-

"இதுதான் இந்தியா, பாகிஸ்தான் வங்காளதேசத்தில் உள்ள பிரச்சினையாகும். நாங்கள் முன்னேற மாட்டோம் என்ற வகையில் ரசிகர்கள் இருக்கின்றனர். எனவே ரசிகர்கள் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் இறுதியில் அவர் உங்களுடைய வீரர். அவர் மும்பை அணிக்காக விளையாடுகிறார். அவர் உங்களை வெற்றி பெறச் செய்யக் கூடியவர். அதனால் உங்கள் சொந்த வீரருக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில் அர்த்தமில்லை.

நீங்கள் அவரை கொஞ்சம் விமர்சிக்கலாம். ஆனால் தொடர்ந்து விமர்சிக்காமல் ரசிகர்கள் அதிலிருந்து நகர வேண்டும். ஐ.பி.எல். தொடரில் இது போன்றவை நடக்கும். வருங்காலத்தை கருத்தில் கொண்டு சி.எஸ்.கே. அணியைப்போல் மும்பை அணியிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் என்னுடைய பார்வையில் ரோகித் சர்மா இன்னும் ஒரு வருடம் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும். அடுத்த வருடம் வேண்டுமானால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக வந்திருக்கலாம்" என்று கூறினார்.


Next Story