ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி


ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி
x
தினத்தந்தி 14 Oct 2017 9:45 PM GMT (Updated: 14 Oct 2017 8:01 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து தொடரில் ஹோண்டுராசை 5–1 என்ற கோல் கணக்கில் பந்தாடிய பிரான்ஸ் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது.

கவுகாத்தி,

17–வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) இந்தியாவில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகித்த போட்டியை நடத்திய இந்தியா மூன்று ஆட்டங்களிலும் தோற்று முதல் சுற்றுடன் நடையை கட்டியது.

இந்த நிலையில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. ‘இ’ பிரிவில் கவுகாத்தியில் நடந்த ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் அணி, ஹோண்டுராசை எதிர்கொண்டது. 10–வது நிமிடத்தில் ஹோண்டுராஸ் வீரர் கார்லஸ் மிஜியா கோல் போட்டாலும், அதன் பிறகு பிரான்சின் கை வலுவாக ஓங்கியது. வில்சன் இசிடோர் (14–வது நிமிடம்), அலெக்சிஸ் பிலிப்ஸ் (23, 64–வது நிமிடம்), அமினே கோவ்ரி (86–வது நிமிடம்), யாசின் அட்லி (90–வது நிமிடம்) ஆகிய பிரான்ஸ் வீரர்கள் கோல்கள் போட்டு மிரள வைத்தனர்.

முடிவில் பிரான்ஸ் 5–1 என்ற கோல் கணக்கில் ஹோண்டுராசை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. ஏற்கனவே நியூகலிடோனியா, ஜப்பான் அணிகளையும் பிரான்ஸ் வென்று இருந்தது

இதே பிரிவில் நடந்த ஜப்பான்– நியூகலிடோனியா இடையிலான மற்றொரு ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஜப்பான் வசமே பந்து 68 சதவீதம் சுற்றிக்கொண்டிருந்தது. கோல் கம்பம் நோக்கி 22 ஷாட்டுகளையும் அடித்தனர். ஆனாலும் ஜப்பானால் ஒரு வாய்ப்பை மட்டுமே (7–வது நிமிடத்தில் நகமுரா) கோலாக்க முடிந்தது. 83–வது நிமிடத்தில் நியூகலிடோனியா வீரர் ஜினோ கோல் போட்டு சமனுக்கு கொண்டு வந்தார்.

இந்த பிரிவில் பிரான்ஸ் (9 புள்ளி), ஜப்பான் (4 புள்ளி), ஹோண்டுராஸ் (3 புள்ளி) ஆகிய அணிகள் 2–வது சுற்றுக்கு முன்னேறின. முதல்முறையாக உலககோப்பையில் கால் பதித்த நியூகலிடோனியா ஒரு புள்ளியுடன் வெளியேறியது.

2–வது சுற்று ஆட்டத்தில் (நாக்–அவுட்) பிரான்ஸ் அணி ஸ்பெயினையும், ஹோண்டுராஸ் அணி முன்னாள் சாம்பியன் பிரேசிலையும் சந்திக்கிறது.


Next Story