'சார் தாம்' யாத்திரை தொடக்கம்; கேதர்நாத் கோவிலில் முதல் நாளில் 29 ஆயிரம் பேர் தரிசனம்

'சார் தாம்' யாத்திரையை முன்னிட்டு கேதர்நாத் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.

Update: 2024-05-11 15:30 GMT

டேராடூன்,

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான 'சார் தாம்' யாத்திரைப் பயணம் நேற்று தொடங்கியது.

ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் குகைக்கோவில்கள் மூடப்பட்டு விடும். மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு கேதர்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பகல் 12.20 மணிக்கு கங்கோத்ரி கோவில் நடை திறக்கப்பட்டது. பத்ரிநாத் கோவிலின் நடை வரும் 12-ந்தேதி(நாளை) காலை 6 மணிக்கு திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் கேதர்நாத் கோவிலில் நேற்று ஒரே நாளில் சுமார் 29 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சார் தாம் யாத்திரை 10-ந்தேதி தொடங்கியது. நேற்றும், இன்றும் கேதர்நாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 29 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் முதல் நாளில் கேதர்நாத்தில் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியின் அறிவுறுத்தலின்பேரில், யாத்திரை செல்வோரின் பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுமார் 125 சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் பக்தர்களின் யாத்திரை பாதைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பக்தர்களின் உதவிக்காக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் யாத்திரை பாதையை சுத்தமாக வைத்திருக்கவும், பக்தர்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்