காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் கருடசேவை உற்சவம்

தங்க கருட வாகனத்தில் 15கிலோமீட்டர் தூரத்திற்கு வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் காத்திருந்து கற்பூர ஆரத்தி காட்டி சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.

Update: 2024-05-22 11:53 GMT

காஞ்சிபுரம்,

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.

வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான கருட சேவை உற்சவம் மூன்றாம் நாள் காலையான இன்று நடைபெற்றது.

கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு,வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து,ஊதா நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், செண்பகப்பூ மனோரஞ்சித பூ மல்லிகை பூ மற்றும் பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து, மஞ்சள் பட்டு உடுத்திய தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணி அளவில்மேளதாள, நாதஸ்வர வாத்தியங்கள், முழங்க,வேதப்பாராயண கோஷ்டியினர் பாடிவர, மஞ்சள் பட்டு உடுத்திய தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் பாதம் தாங்கிகள் தூக்கிச் செல்ல கோவில் வளாகத்தில் உள்ள ஆழ்வார் பிரகாரத்தில் வலம் வந்து நம்மாழ்வார்,ராமானுஜர்,தேசிகர் சன்னதிகளில் மரியாதையை ஏற்று கொண்டு கோபுர வாசலில் எழுந்தருளி சிறப்பு தீபாராதனை செய்து கொண்டு கோபுர தரிசனம் தந்தார்.

இதனைத் தொடர்ந்து ஐந்து மணி அளவில் தங்க கருட வாகனத்தில் இரட்டை குடையுடன் சன்னதி வீதி வழியாக திருவீதி உலா புறப்பட்டார்.

தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு செட்டி தெரு திருக்கச் நம்பி தெரு ரங்கசாமி குளம் விளக்கொளி பெருமாள் கோவில் தெரு வழியாக தேசிகர் சன்னதிக்கு எழுந்தருளி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் தேசிகர் மரியாதையை ஏற்று, பின்னர் பிள்ளையார் பாளையம் கிருஷ்ணன் தெரு, புத்தேரி தெரு வழியாக மேற்கு ராஜ வீதியில் உள்ள கச்சபேஸ்வரர் கோவில் அருகே வருகை தந்த பெருமாளுக்கு குடை மாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கங்கைகொண்டான் மண்டபம் ஆஞ்சநேயர் கோவிலில் மண்டகப்படி கண்டருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அங்கிருந்து பூக்கடை சத்திரம் கிழக்கு ராஜ வீதி காமராஜர் சாலை, காந்தி ரோடு வழியாக மதியம் 2 மணி அளவில் கோவிலுக்கு திரும்பினார்.

தங்க கருட வாகனத்தில் 15கிலோமீட்டர் தூரத்திற்கு வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் உள்ளூர் வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து கற்பூர ஆரத்தி காட்டி சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

கருட சேவை உற்சவத்தில் அகோபில மட ஜீயர் சுவாமிகள், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்