ஓணாங்குடியில் வடமாடு ஜல்லிக்கட்டு; 13 பேர் காயம்
அரிமளம்:
அரிமளம் ஒன்றியம், ஓணாங்குடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. கோவில் முன்பு உள்ள திடலில் நீளமான கம்பியில் கயிறு கட்டப்பட்டு அதில் மாடுகளை கட்டி வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த வடமாடு ஜல்லிக்கட்டில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 10 மாடுகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு மாடுகளையும் அடக்குவதற்கு 9 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு மாடுகளையும் பிடிப்பதற்கு 25 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட 10 மாடுகளில் மூன்று மாடுகளை மட்டுமே வீரர்கள் அடக்கினார்கள். ஏழு மாடுகளை பிடிக்க முடியாமல் வீரர்கள் திணறினார்கள். இதில் 13 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு சுகாதார பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர். வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் விழா கமிட்டி சார்பில் ரூ.5001 மற்றும் அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் சார்பில் பல்வேறு சிறப்பு பரிசுகள் ரொக்கமாக வழங்கப்பட்டது. வடமாடு ஜல்லிக்கட்டை ஓணாங்குடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். பாதுகாப்பு பணியில் அரிமளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஓணாங்குடி ஊரார்கள், நகரத்தார்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

