

புதுச்சேரி
16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த மினிலாரி டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சிறுமி பலாத்காரம்
கடலூர் பரங்கிபேட்டையை சேர்ந்தவர் முகமது இஷாந்த் (வயது26). மினி லாரி டிரைவர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு சிதம்பரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை புதுவைக்கு கடத்தி வந்துள்ளார்.
அதன்பின் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை புதுவை பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு தப்பிச்சென்றார்.
இதுகுறித்து புதுவை குழந்தைகள் பாதுகாப்பு குழு அளித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது இஷாந்தை கைது செய்தனர்.
10 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜெ.செல்வநாதன் முன்னிலையில் நடந்து வந்தது. விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. முகமது இஷாந்த் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பச்சையப்பன் வாதாடினார்.