

ராமநத்தம்,
ராமநத்தம் அருகே உள்ள கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் ரமேஷ்(வயது 26). இவருக்கும் பெண்ணாடம் அடுத்துள்ள துறையூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி(21) என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 7 மாதத்தில் பெண்குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரமேஷ் வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்று விட்டார்.
கிணற்றில் குதித்தார்
நேற்று காலை ரமேஷின் தாய் வள்ளியம்மை, தந்தை ராமசாமி ஆகிய இருவரும் கிருஷ்ணவேணியிடம் சண்டை போட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் தனது தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறி அழுதுள்ளார்.
பின்னர் திடீரென வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கிருஷ்ணவேணி குதித்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ராமநத்தம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி கிருஷ்ணவேணியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
ஆம்புலன்ஸ் முற்றுகை
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ராமநத்தம் போலீசார் கிருஷ்ணவேணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சில் ஏற்ற முயன்றனர். அப்போது அங்கு வந்த கிருஷ்ண வேணியின் உறவினர்கள் தடுத்து தகராறில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் சமாதானம் செய்து விட்டு உடலை ஆம்புன்சில் ஏற்றி ராமநத்தம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது ஆத்திரம் அடைந்த கிருஷ்ணவேணியின் உறவினர்கள் அவரது தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்தால் மட்டுமே உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பமுடியும் என்று கூறி திடீரென ஆம்புலன்சை முற்றுகை யிட்டனர்.
சாலை மறியல்
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதியும் உடன்பாடு ஏற்படாததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கிருஷ்ணவேணியின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் கிருஷ்ணவேணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மாமனார், மாமியார் கைது
மேலும் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணவேணியின் தாய் அஞ்சலை(47) கொடுத்த புகாரின் பேரில் ராமசாமி, வள்ளியம்மை, ரமேஷ் மற்றும் நாத்தனார் வெண்ணிலா ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த ராமநத்தம் போலீசார் ராமசாமி, வள்ளியம்மமை ஆகியோரை கைது செய்து கிருஷ்ணவேணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமான 1 ஆண்டில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராமநத்தம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.