105 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரெயில் பாலத்தை வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டும் - நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்

105 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரெயில் பாலத்தை வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தினார்.
105 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரெயில் பாலத்தை வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டும் - நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்
Published on

ராமேசுவரம்,

பாம்பன் கடலில் ரூ.250 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் பணிகளை நவாஸ்கனி எம்.பி. ஆய்வு செய்தார். புதிய ரெயில் பாலத்திற்காக கடலுக்குள் தூண்கள் அமைக்கும் பணிகளை படகில் சென்று பார்வையிட்டார். அப்போது புதிய ரெயில் பால திட்ட ஆலோசகர் அப்துல்ஹமீது, புதியரெயில் பாலத்தின் பணிகள் முடியும் காலம், பாலத்தின் தூண்கள் விவரம் தூக்குப்பாலத்தின் சிறப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினார். ஆய்வின் போது உடன் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், பாம்பன் ஊராட்சி தலைவர் அகிலாபேட்ரிக், தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற தலைவர் குயின்மேரி, தி.மு.க. மண்டபம் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பேட்ரிக் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஆய்வு முடிந்து நவாஸ்கனி எம்.பி.நிருபர்களிடம் கூறியதாவது:- பாம்பன் கடலில் புதிய ரெயில் பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளேன்.புதிய ரெயில் பால பணிகள் வருகிற 2021-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய ரெயில் பாலம் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வந்த பின்பு தற்போதுள்ள 105 ஆண்டுகளை கடந்த பழமையான ரெயில் பாலத்தை அகற்ற கூடாது. சுற்றுலா பயணிகள் பார்த்து செல்லும் வகையில் வரலாற்று நினைவு சின்னமாக அறிவிக்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய உள்ளேன். ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி இடையிலான ரெயில்பாதை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது எம்.பி.யிடம் ம.தி.மு.க.மாவட்டசெயலாளர் பேட்ரிக், புதிய ரெயில் பாலத்தின் மைய பகுதியில் தூக்குப் பாலமானது 3 மீட்டர் உயரத்தில் கட்ட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த உயரத்தில் தூக்குப்பாலம் அமையும் பட்சத்தில் மீன்பிடிக்க செல்லும் மீன்பிடி படகுகள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் புதிய ரெயில் பாலத்தின் மைய பகுதியில் கட்டப்படவுள்ள தூக்குப்பாலத்தை கடல் மட்டத்தில் இருந்து 8 முதல் 10 மீட்டர் உயரத்தில் கட்டவேண்டும் இது குறித்து ரெயில்வேதுறை மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி மனுகொடுத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com