

கோத்தகிரி
கோத்தகிரி கடைவீதி பகுதியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருவிழா, கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாலை 3 மணிக்கு கோவில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இதன் மூலம் குடும்பத்தில் எந்தவித தீங்கும் இல்லாமல், தாலி பாக்கியம் மற்றும் உடல் நல ஆரோக்கியம் கிடைப்பதாக நம்பப்படுகிறது. பெண்கள் விளக்கினை ஏற்றி கோவில் அர்ச்சகர்கள் சுலோகங்களை உச்சரிக்க, அதனை தொடர்ந்து அவர்கள் அதே சுலோகங்களை சொல்லிக்கொண்டே தங்களிடம் இருந்த குங்குமம் மற்றும் பூக்களை சிறிது சிறிதாக எடுத்து விளக்கின் மீது தூவி அம்மனை வழிபட்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு கோவிலில் அக்கினி பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.