வேலூர் ஜெயிலில் மோப்பநாய் உதவியுடன் 120 போலீசார் அதிரடி சோதனை

வேலூர் ஜெயிலில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என மோப்பநாய் உதவியுடன் 120 போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
வேலூர் ஜெயிலில் மோப்பநாய் உதவியுடன் 120 போலீசார் அதிரடி சோதனை
Published on

வேலூர்

தடை செய்யப்பட்ட பொருட்கள்

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் மற்றும் பெண்கள் தனிச்சிறை உள்ளது. இங்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் உள்பட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜெயிலுக்குள் கைதிகள் கஞ்சா, செல்போன், புகையிலை பொருட்கள், ஆயுதங்கள் போன்றவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கைதிகள் பலர் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர். கடந்த காலங்களில் ஏராளமான செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளியே இருந்து ஜெயிலுக்குள் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் வீசப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அதிரடி சோதனை

இந்த நிலையில் வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் மேற்பார்வையில் நேற்று வேலூர் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் 80 பேர் கொண்ட போலீசார் ஆண்கள் ஜெயிலில் காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர். அப்போது 2 மோப்ப நாய்கள் உதவியுடன் கைதிகளின் அறை, கழிவறை பகுதிகள், சமையலறை என வளாகம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். 2 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.

இதேபோல இன்ஸ்பெக்டர் சுபா தலைமையில் 40 போலீசார் பெண்கள் ஜெயிலில் சோதனை நடத்தினர். 2 ஜெயில்களிலும் நடந்த இந்த அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். ஜெயிலில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com