

மும்பை,
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக மும்பை போலீசார் 4 நாளில் 160 பேரை கைது செய்து உள்ளனா.
போதைப்பொருள் ஒழிப்பு
மும்பை போலீசார் கடந்த திங்கட்கிழமை போதைப்பொருள் நடமாட்டத்துக்கு எதிராக சிறப்பு நடவடிக்கையை தொடங்கினர். போலீசார் மாநகராட்சி ஊழியர்களுடன் பள்ளி, கல்லூரி, மார்க்கெட், ரெயில் நிலையங்கள் மற்றும் பூங்காக்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது அதிகாரிகள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோல போலீசார் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, புகையிலை பொருட்களை விற்று வந்த பான் கடைகள் மீதும் நடவடிக்கை எடுத்தனர்.
160 பேர் கைது
போலீசார் கடந்த 4 நாட்களில் போதைப்பொருள் தொடர்பாக 115 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இதில் 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து எம்.டி., கஞ்சா, சரஸ், கொகைன் போன்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனை செய்த 2 ஆயிரத்து 694 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.