

புதுச்சேரி
புதுவை அரசு ஊழியர் வீட்டில் 18 பவுன் நகைகளை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மின்துறை எழுத்தர்
புதுவை அண்ணா நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சந்திர சேகர் (வயது 43). இவர் புதுவை அரசின் மின்துறையில் மேல்நிலை எழுத்தராக பணி புரிந்து வருகிறார்.
இவரது வீட்டில் நெல்லித்தோப்பு தச்சர் வீதியை சேர்ந்த செல்வி (36) என்ற பெண் 7 ஆண்டுகளுக்கு முன்பு வேலைபார்த்தார். பின்னர் அவர் வேலையில் இருந்து நின்றுவிட்டார்.
நகைகள் திருட்டு
இந்தநிலையில் சந்திரசேகரின் தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை கவனித்துக்கொள்ளும் விதமாக செல்வி மீண்டும் வேலைக்கு நியமிக்கப்பட்டார்.
சந்திரசேகரின் மனைவிக்கு சொந்தமான நகையை அலமாரியில் கடந்த மாதம் வைத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அலமாரியை திறந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 18 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. யாரோ அதை திருடி சென்றுள்ளனர்.
வேலைக்கார பெண் கைது
இந்த திருட்டு தொடர்பாக சந்திரசேகர் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில் தனது வீட்டில் வேலை செய்யும் செல்வி மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து செல்வியிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் நகைகளை திருடியதை செல்வி ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து செல்வியை கைது செய்தார்.