மருதமலை கோவில் வனப்பகுதியில் 184 அடி உயர முருகன் சிலையை அமைக்க அனுமதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வேறு ஏதாவது ஒரு மாற்று இடத்தை கண்டறிந்து சிலை அமைக்கலாம் என ஐகோர்ட்டு கூறியுள்ளது.
மருதமலை கோவில் வனப்பகுதியில் 184 அடி உயர முருகன் சிலையை அமைக்க அனுமதிக்க முடியாது -  சென்னை ஐகோர்ட்டு
Published on

சென்னை,

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் ரூ.110 கோடி செலவில், 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்கப்படும் என்று அறநிலையத்துறை அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, 184 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமையவுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்த வக்கீல்கள் டி.மோகன், செவணன் மோகன் உள்ளிட்டோர் கொண்ட குழு அறிக்கை தாக்கல் செய்தது. அதேபோல, அறநிலையத்துறை தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையை படித்துப்பார்த்த நீதிபதிகள், ''பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 137 மீட்டர் தூரத்தில் தான் சிலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் இதுபோல கட்டுமானங்கள் மேற்கொள்ள முடியாது. 500 மீட்டர் சுற்றளவுக்கு உட்பட்ட பகுதியில் எந்தவொரு கட்டுமானத்தையும் அனுமதிக்க முடியாது. முருகன் சிலை அமைத்தால் தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். அதனால் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும்'' என்று கருத்து தெரிவித்தனர்.

அதற்கு அறநிலையத்துறை தரப்பில், ‘‘முருகன் சிலைக்கு பூஜைகள் நடத்தப்படாது. சிலையை வலம் வந்து வழிபாடு நடத்த மட்டுமே அனுமதிக்கப்படும். 137 மீட்டர் தூரம் என்பதற்கு பதிலாக தற்போது 437 மீட்டர் தொலைவில் முருகன் சிலை அமைக்க மாற்று இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டது.

இதையேற்க மறுத்த நீதிபதிகள், ''அந்த தூரமும் வனப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வேறு ஏதாவது ஒரு மாற்று இடத்தை கண்டறிந்து சிலை அமைக்கலாம். 500 மீட்டருக்குள் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது. புதிய இடத்தை தேர்வு செய்து அதுகுறித்து அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com