

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலுப்பையூரணி பகுதியில் கடந்த 30.9.2018 அன்று 48 வயது பெண்ணை தாக்கி கொலை செய்த சம்பவத்தில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேற்சொன்ன வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை கண்டுபித்து, கைது செய்ய தனிப்படை அமைத்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து வழக்கு குறித்த சாட்சியங்களை சேகரித்தனர். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்சொன்ன கொலை சம்பவத்தில் ஈடுபட்டது கோவில்பட்டியை சேர்ந்த டேவிட்ராஜ் (வயது 28) மற்றும் அப்போது இளஞ்சிறாராக இருந்த ஒருவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன குற்றவாளிகளை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேற்சொன்ன கொலை வழக்கு 8 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்தும் ஒருவரை கையகப்படுத்தியும் சிறப்பாக பணிபுரிந்த கோவில்பட்டி டி.எஸ்.பி. மற்றும் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் காவல் துறையினரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.