சிறுமிகளை திருமணம் செய்த 2 பேர் போக்சோவில் கைது

ஊட்டியில் சிறுமிகளை திருமணம் செய்த 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
சிறுமிகளை திருமணம் செய்த 2 பேர் போக்சோவில் கைது
Published on

ஊட்டி,

ஊட்டியில் சிறுமிகளை திருமணம் செய்த 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாலியல் பலாத்காரம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(வயது 30). கூலி தொழிலாளி. இவர் வேலைக்காக ஊட்டிக்கு வந்து செல்வது வழக்கம். அங்கு கேரட் அறுவடை செய்து, அதன் மூட்டைகளை லாரியில் ஏற்றி, இறக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், சந்தோஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

போக்சோவில் கைது

இதுகுறித்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த சிறுமியின் தாயார் புகார் அளித்தார். அதன்பேரில் சந்தோஷ்குமாரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதும், சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. உடனே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

கோவைக்கு கடத்தல்

இதேபோன்று குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ(20). இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. பின்னர் அந்த சிறுமியை கோவைக்கு கடத்தி சென்று, அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து அவர் திருமணம் செய்தார்.

இதற்கிடையில் சிறுமியை காணவில்லை என்று ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீ, அந்த சிறுமியை கோவைக்கு கடத்தி சென்றது உறுதியானது. உடனே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஸ்ரீயை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com