

புனே,
பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக தந்தையை கொலை செய்து உடலை எரித்த 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.
கள்ளத்தொடர்பு
புனே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்தவர் தனஞ்செய் (வயது43). நொறுக்குதீனி கடை நடத்தி வந்தார். இவருக்கு சுஜித் (22), அபிஜித் (18) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சுஜித் 2-ம் ஆண்டு கம்ப்யூட்டர் என்ஜினீயராகவும், அபிஜித் 12-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனஞ்செய்க்கு சமூகவலைத்தளம் மூலமாக நாக்பூரை சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு கிடைத்தது. அப்பெண்ணுடன் சாட்டிங் செய்து வந்தனர். நாளடைவில் அவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது பற்றி அறிந்த தனஞ்செய் குடும்பத்தினர் அவரின் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறிவந்தனர். இந்த நிலையில் தந்தையின் தவறான நடத்தையால் அவரை 2 மகன்களும் சேர்ந்து கொலை செய்ய திட்டம் போட்டனர்.
தந்தை கொலை
சம்பவத்தன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனஞ்செயை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியும், தலையணையால் அமுக்கியும் கொலை செய்தனர். பின்னர் உடலை இந்திராயணி ஆற்றின் அருகே எரித்து சாம்பலை ஆற்றில் வீசி விட்டனர். கொலை செய்த தடயத்தை அழித்து விட்டு எதுவும் தெரியாத போல வீட்டிற்கு வந்தனர். ஒரு வாரம் கழிந்த நிலையில் தனது தந்தை காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து தனஞ்செயின் செல்போனை ஆய்வு செய்து விசாரித்தனர்.
கைது
இதில் நாக்பூர் பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்ததால் போலீசார் பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பல தடவை தனஞ்செய் தன்னிடம் தெரிவித்து இருந்ததாக அப்பெண் போலீசாரிடம் கூறினார். சந்தேகம் அடைந்த போலீசார் புகார் அளித்த 2 மகன்களிடம் கிடுக்கிப்பிடி விசாரித்தனர். இதில் அவர்கள் தான் கொலை செய்தார்கள் என்பது உறுதியானது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.