3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

நாகர்கோவிலில், போக்சோ வழக்கில் தொடர்புடைய 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவிலில், போக்சோ வழக்கில் தொடர்புடைய 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

போக்சோ வழக்கு

குமரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சரிசெய்ய, தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் போக்சோ வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

நாகர்கோவில் கோட்டார் மஞ்சான்குடியிருப்பை சேர்ந்தவர் சூரியா என்ற தளபதி சூரியா (வயது 25). இவர் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், கோட்டார் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் போக்சோ மற்றும் கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இருப்பினும் அவர் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார்.

அதனை ஏற்று சூரியாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் நேற்று சூரியாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

மேலும் 2 பேர்

இதேபோல் கோட்டார் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்த கிஷோர் குமார் (19) என்பவரை நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். அவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து நேற்று அவரை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

ஆசாரிபள்ளம் குருகுலம் சாலையை சேர்ந்த ஆல்டோ கைகேல் டோனிக் (23) என்பவர் மீதும் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு உள்ளது. நேற்று அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். குமரி மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் குண்டர் சட்டத்தில் 22 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com