

வாணியம்பாடி
வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 70). இவர், வீட்டுக்கு அருகில் மளிகைக் கடை வைத்துள்ளார். இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அவரை நோட்டமிட்டு பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 2 பேரில் ஒருவர் வீட்டின் கேட்டுக்கு அருகில் வந்தார். வாசலில் நின்றிருந்த ராஜலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார். இந்தக் காட்சி வீட்டின் வெளியே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இதுகுறித்து ராஜலட்சுமி வாணியம்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பரிசீலனை செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.