30 நிமிடம் சைக்கிள் ஓட்டினால்...

குழந்தை பருவத்தில் பலரும் மணிக்கணக்கில் சைக்கிள் ஓட்டியிருப்பார்கள்.
30 நிமிடம் சைக்கிள் ஓட்டினால்...
Published on

குழந்தை பருவத்தில் பலரும் மணிக்கணக்கில் சைக்கிள் ஓட்டியிருப்பார்கள். அதே ஆர்வத்துடன் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளும் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தியபடி நாமும் சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை தொடர வேண்டும் என்கிறார், டாக்டர் ஆஷிஷ் கானிஜோ. மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த இவர், உடலுக்கும், மன நலனுக்கும் நன்மைகளை வழங்கும் எளிமையான உடற்பயிற்சியாக சைக்கிள் ஓட்டுவது அமைந்திருப்பதாக சொல்கிறார்.

''சைக்கிள் ஓட்டுவது ஏரோபிக் பயிற்சியின் ஒரு அங்கம். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் சைக்கிள் ஓட்ட வேண்டும். வயது மற்றும் உடல் வலிமையை பொறுத்து இரண்டு கிலோமீட்டர் முதல் 25 கிலோமீட்டர் வரை தினமும் 2 மணிநேரம் சைக்கிள் ஓட்டலாம்'' என்கிறார்.

சைக்கிள் ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் சில நன்மைகளை பட்டியலிடுகிறார்.

* சைக்கிள் ஓட்டுவது இதயத்திற்கு சிறந்த பயிற்சியாக அமையும். இதயத்தை பலப்படுத்தும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். தொடர்ந்து சைக்கிள் ஓட்டுவது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும்.

* மற்ற பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது சைக்கிள் ஓட்டுவது மூட்டுகளுக்கு மென்மை தன்மையை ஏற்படுத்திக்கொடுக்கும். கீல்வாதம் அல்லது மூட்டு காயங்களால் அவதிப்படுபவர்களுக்கு சைக்கிள் பயிற்சி சிறந்தது. இது குறைந்த அழுத்தம் கொண்ட உடற்பயிற்சியாக அமையும். மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாமல் அதன் இயக்கத்தை மேம்படுத்தும்.

* சைக்கிள் ஓட்டுதல் கால்கள், மூட்டு இணைப்புகள் உட்பட பல்வேறு தசைக் குழுக்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். தசைகளை வலுப்படுத்தவும் உதவும். ஒட்டுமொத்த உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

* சைக்கிள் ஓட்டுவது கலோரியை எரிக்கும் பயிற்சியாகவும் அமையும். உடல் எடையை சீராக நிர்வகிக்கவும் உதவும். சைக்கிள் ஓட்டும் பயிற்சியுடன் சீரான உணவுப்பழக்கத்தை பின்பற்றுவது எடை இழப்புக்கு வழிவகுக்கும். உடல் எடையை சீராக பேணுவதற்கும் வழிவகை செய்யும்.

* வாரத்தில் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அந்த பயிற்சியை ஈடு செய்துவிட முடியும். இந்த பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் எடையை பராமரிக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

* தினமும் சைக்கிள் ஓட்டும் வழக்கத்தை பின்பற்றுவது எண்டோர்பின்களை வெளியிடுவதற்கு வித்திடும். அதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும். இது நல்ல உணர்வு கொண்ட ஹார்மோனாக குறிப்பிடப்படுவதால் கவலை, மனச்சோர்வை தணித்து, அமைதியான உணர்வுகளுக்கு வித்திடும்.

* சைக்கிள் ஓட்டுவது செரோடோனின் உற்பத்தியை தூண்டும். இது மனநிலையை ஒழுங்குபடுத்தும் நரம்பியல் கடத்தியாகும். செரோடோனின் அளவை அதிகப்படுத்துவதன் மூலம் மனநிலையை மேம்படுத்தலாம். மனச்சோர்வுக்கான் அறிகுறிகளை விரட்டியடித்து மன ஆரோக்கியத்தை பலப்படுத்த முடியும்.

* சைக்கிள் ஓட்டுவது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். மேலும் மூளைக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கும். இந்த மேம்படுத்தப்பட்ட சுழற்சி அறிவாற்றல் செயல்பாட்டையும், நினைவகத்திறனையும் மேம்படுத்தும்.

* சைக்கிள் ஓட்டுவது அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களில் இருந்து விடுவித்து மனதுக்கும், உடலுக்கும் தேவையான ஆற்றலை வழங்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com