காய்கறி கடைக்காரர் வீட்டில் 35¾ பவுன் நகை-ரூ.7½ லட்சம் திருட்டு

காய்கறி கடைக்காரர் வீட்டில் 35¾ பவுன் நகை-ரூ.7½ லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
காய்கறி கடைக்காரர் வீட்டில் 35¾ பவுன் நகை-ரூ.7½ லட்சம் திருட்டு
Published on

பெரம்பலூர்:

காய்கறி கடைக்காரர்

பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு டால்பின் நகரை சேர்ந்தவர் குமரன்(வயது 47). இவர் பெரம்பலூரில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார். இவர் தனது மனைவி பேபியுடன் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் வாலிகண்டபுரம் கிராமத்தில் நடந்த வாரச்சந்தையில் காய்கறி வியாபாரம் செய்ய குமரன் சென்று விட்டார்.

இந்நிலையில் மார்க்கெட்டில் உள்ள கடையில் இருந்த பேபி, அருகே கடை வைத்திருக்கும் வெங்கடேசனின் தந்தை இறந்துவிட்டதால், கடையை பூட்டிவிட்டு துக்கம் விசாரிக்க வெங்கடேசன் வீட்டிற்கு சென்றார். வாரச்சந்தையில் இருந்து இரவில் தனது வீட்டிற்கு வந்த குமரன், வீட்டை பூட்டிவிட்டு வெங்கடேசன் வீட்டுக்கு சென்று விட்டார்.

நகை- பணம் திருட்டு

நேற்று காலை குமரனும், பேபியும் துக்க வீட்டில் இருந்து தங்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கிரில் கேட் பூட்டு மற்றும் முன்கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அறையில் இருந்த பீரோவின் கதவுகள் நெம்பி திறக்கப்பட்டு, லளாக்கரில் இருந்த 35 பவுன் நகைகள், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

குமரன் வியாபாரத்துக்கு வாங்கிய கடனை அடைப்பதற்காக அந்த பணத்தை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் அளித்த தகவலின்பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் நிஞ்சா அந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி, மீண்டும் அங்கு திரும்பி வந்தது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா கை.களத்தூரை சேர்ந்த பால்பண்ணை உரிமையாளரான செல்வராஜ் (40) என்பவர், குமரன் வீட்டை அடுத்துள்ள தெருவில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். செல்வராஜின் மனைவி பாக்கியலெட்சுமி காரியானூரில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன்களுக்கு பள்ளி விடுமுறை விடப்பட்டிருந்ததால் கடந்த 24-ந்தேதி குடும்பத்துடன் கை.களத்தூருக்கு சென்று விட்டனர்.

நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெரம்பலூருக்கு காலை 8.30 மணிக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கிரில் கேட் மற்றும் முன்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் படுக்கை அறை கதவின் பூட்டும், பீரோவும் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 1 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம், குழந்தைகளின் 3 வெள்ளிச்சங்கிலிகள் ஆகியவை திருட்டு போயிருந்தன.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதையடுத்து செல்வராஜின் வீட்டிலும் போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு 2 வீடுகளிலும் ஒரே கும்பலை சேர்ந்த மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பெரம் பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com