குடும்ப ஒற்றுமைக்கு தேவையான 5 பண்புகள்

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க அந்த குடும்பத்திடம் இருக்க வேண்டிய 5 பண்புகள் பற்றி, விதுரர் கூறிய கருத்துக்களை கூறலாம்.
குடும்ப ஒற்றுமைக்கு தேவையான 5 பண்புகள்
Published on

மகாபாரதத்தில் அதிகம் பேசப்படாத, அதே நேரம் மகாபாரதக் கதையையும், அஸ்தினாபுரத்தின் ஆட்சியையும் வழிநடத்திச் செல்லும் முக்கியமான இடத்தில் இருந்தவர், விதுரர். அரச குடும்பத்தில் பிறந்து, மாபெரும் வீரத்துடன் அரசனாகும் தகுதியைப் பெற்றிருந்தாலும், தந்தையைப் போல ஆன்மிகத்தின் மீது பற்று வைத்ததன் காரணமாக, தன்னுடைய சகோதரர்களான பாண்டுவையும், திருதிராஷ்டிரரையும் அரசர்களாக்கி அழகு பார்த்தார்.

தன் காலம் உள்ளவரை, அஸ்தினாபுர ஆட்சிக்கு மதிநுட்பம் மிகுந்த மந்திரியாக இருந்து, பல நல்ல அறம் வாய்ந்த கருத்துக்களை, தகுந்த நேரத்தில் எடுத்துரைத்தவர், விதுரர். அவர் அஸ்தினாபுரத்தின் மந்திரியாக மட்டுமின்றி, கண்ஒளி இல்லாத திருதிராஷ்டிரருக்கு பார்வையாகவும் இருந்து வழிகாட்டியவர். அவர் மன்னனான திருதிராஷ்டிரருக்கும், அரசவைக்குமான கலந்துரையாடல்களின் போது, நல்லறங்கள், அறிவுரைகள், ராஜதந்திரங்கள், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என்று பலவற்றை எடுத்துக் கூறியவர். அவை அனைத்தும் 'விதுரர் நீதி' என்று தொகுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க அந்த குடும்பத்திடம் இருக்க வேண்டிய 5 பண்புகள் பற்றி, விதுரர் கூறிய கருத்துக்களை கூறலாம்.

* ஒரு குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்க முதன் முதலில் அந்த குடும்பத்தின் மூத்த பிள்ளை அறம் நிறைந்தவராக, ஒற்றுமையை போற்றுபவராக இருக்க வேண்டும். காரணம் தந்தைக்கு பிறகு குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமையை காப்பவராக அவரே இருப்பார். அவர் ஒற்றுமையிலிருந்தும், அறத்தி லிருந்தும் விலகினால் அது குடும்ப நன்மைக்கு கேடாக அமையும்.

* வீட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் உறவுகளிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். தொடர்ச்சியாக சண்டை, சச்சரவுகளில் ஈடுபட்டு குடும்ப அமைதியை குலைப்பவர்கள், வீட்டின் நேர்மறை அதிர்வுகளை சிதைப்பவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களை புறந்தள்ள வேண்டும்.

* குடும்பத்தின் இளையோர்களை சிறு பிள்ளைகள் என உதாசீனப்படுத்தாமல் அவர்களுக்குரிய மரியாதையை கொடுத்து அவர்கள் மீதான அன்பை, அக்கறையை சரியான நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும். அவர்களை அங்கீகரிப்பதன் மூலம் குடும்பத்தின் ஒற்றுமை பலப்படும்.

* குடும்பமே என்றாலும் ஒரு சிலர் மாற்றுக் கருத்துடன் இருப்பது இயல்பு. இங்குதான் சவாலே... ஒருவர் மாற்றுக் கருத்துடன் இருப்பது தவறல்ல. ஆனால் அது ஒரு குடும்பத்தின் வீழ்ச்சிக்கான சிந்தனையாக இருக்கக் கூடாது. தனிப்பட்ட அகங்காரம் காரணமாக, வீட்டின் அமைதியை ஒருவர் சீர்குலைப்பார் எனில் அவரிடம் இருந்து ஒதுங்கியிருத்தல் நலம்.

* குடும்ப ஒற்றுமையை பேணும் அதேவேளையில், குடும்பத்தில் ஒருவர் சமூகத்திற்கு எதிராக செய்கிற செயலை அந்த குடும்பம் ஆதரிக்கக்கூடாது. இறுதியாக குடும்பத்தில் கிடைக்கிற அன்பும், பெறுகிற அன்பும் எந்தவித எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்ப்பட்டதாக இருக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com