நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு 6 காரணங்கள்

கொரோனா மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக குரங்கு அம்மை, தட்டம்மை, டெங்கு காய்ச்சல், நிபா வைரஸ் போன்ற பல்வேறு நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடுவதும், ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கங்களை பின்பற்றுவதுமே தொற்றுநோய்களை எதிர்த்து போராட உதவும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான 6 காரணங்கள் குறித்து பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு 6 காரணங்கள்
Published on

1. ஊட்டச்சத்து குறைபாடு:

போதுமான அளவு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமற்ற உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, நொறுக்குத் தீனி போன்றவற்றில் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருக்காது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்புக்கு குடலில் இருக்கும் மைக்ரோபயோட்டா இன்றியமையாதது.

மேலும் புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்புகள், வைட்டமின்கள் டி, சி, பி, ஏ, ஈ, கே மற்றும் இரும்பு, கால்சியம், செலினியம், துத்தநாகம் போன்ற தாதுக்களும் உடலுக்கு போதுமான அளவு தேவை. அத்துடன் நோய் எதிர்ப்பு அமைப்பு திறம்பட செயல்பட பழங்கள் மற்றும் காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், ப்ரீபயாடிக்குகள், புரோபயாடிக்குகள், தானியங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதும் முக்கியம்.

2. உடற்பயிற்சி இல்லாமை:

தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் வாரத்தில் 3 நாட்களாவது உடற்பயிற்சிக்காக நேரம் செலவிட வேண்டும். இல்லாவிட்டால் நோய் எதிர்ப்பு அமைப்பு சரியாக வேலை செய்யாது. அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

3. மன அழுத்தம்:

நமது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவதன் பின்னணியில் இருக்கும் முக்கிய குற்றவாளிகளில் மன அழுத்தம் முதன்மையானது. ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது அதில் இருந்து மீள்வதற்கான நேரம் அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். பல்வேறு நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள வைத்துவிடும். மன அழுத்தம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேலும் வலுவிழக்கச் செய்து, நோயாளி ஆக்கிவிடும்.

4. தூக்கமின்மை:

மன அழுத்தத்தைப் போலவே தூக்கமின்மையும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அங்கமான ரத்த வெள்ளை அணுக்களின் இயல்பான உற்பத்தியை சீர்குலைத்து விடும். ஒழுங்கற்ற தூக்க முறைகளும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும்.

5. மது-புகைப்பழக்கம்:

மது பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும். ஏனெனில் அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு ஆல்கஹால் காரணமாக பாதிப்படையும். புகைப்பிடித்தல் புற்றுநோயுடன் தொடர்புடையது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளிலும் குறுக்கிடும்.

6. வீட்டுக்குள்ளேயே இருத்தல்:

எப்போதும் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு இருப்பதும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்திவிடும். தினமும் சில நிமிடங்களாவது உடலில் சூரிய ஒளி படர வேண்டும். சூரிய ஒளியின் வெளிப்பாடு சர்க்காடியன் தாளத்தை பராமரிக்க உதவும். இது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது போதுமான அளவு கிடைக்காதபோது நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாகிவிடும்.

கொரோனா காலகட்டத்தில் பலரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு பிரச்சினையை எதிர்கொண்டார்கள். எப்போதும் சளி, இருமலால் அவதிப்படுவது, அடிக்கடி வயிறு சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வது, மன அழுத்தத்திற்கு ஆளாவது, அவ்வப்போது சோர்வாக இருப்பதாக உணர்வது, அடிக்கடி நோய் பாதிப்புக்கு ஆளாவது போன்ற அறிகுறிகளை எதிர்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com