

காக்கா முட்டை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் 2 குழந்தைகளுக்கு தாயாக நடித்ததில் இருந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சங்களில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் ஆசைப்படுகிறார்கள். இதற்கு உதாரணமாக, நம்பர்-1 கதாநாயகி அந்தஸ்தில் இருக்கும் நயன்தாரா, அறம் படத்தில் மாவட்ட கலெக்டராக நடித்தார்.
அதைத்தொடர்ந்து அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி, புலி உள்பட பல படங்களில் நடித்த நந்திதா ஸ்வேதா நர்மதா என்ற புதிய படத்தில், ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். இதுபற்றி அந்த படத்தின் தயாரிப்பாளரும், டைரக்டருமான கீதா ராஜ்புத் கூறியதாவது:-
தாய்க்கும், மகனுக்கும் உள்ள பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியாக சொல்லும் படம், இது. இதில், கதையின் நாயகி நந்திதா ஸ்வேதா 7 வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதை நாயகனாக விஜய் வசந்த் நடிக்கிறார். கவுரவ வேடத்தில் நடிக்க முன்னணி கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
படத்துக்காக, நாகர்கோவிலில் இயற்கை எழிலுடன் கூடிய திறந்தவெளி அரங்கம், பிரமாண்டமான முறையில் அமைக்கப்படுகிறது. இம்மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.
டைரக்டர்-தயாரிப்பாளர் கீதா ராஜ்புத், திருநங்கை பற்றிய என்னை தேடிய நான், காதலை பேசும், மயக்கம், காது கேளாத மற்றும் வாய் பேசாத ஒரு பையனை மையப்படுத்திய கபாலி ஆகிய 3 குறும் படங்களை தயாரித்து இயக்கியவர். பாலா டைரக்ஷனில் வெளிவந்த தாரை தப்பட்டை படத்தில் உதவியாளராக பணியாற்றியவர்.