74 வயதிலும் உற்சாக சைக்கிள் பயணம்

சிறு வயதில் சைக்கிள் ஓட்டிய ஆர்வத்தை இன்று வரை தக்கவைத்துக்கொண்டு உற்சாகமாக வலம் வருபவர்கள் சிலர்தான் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் ஜோத்ஸ்னா.
74 வயதிலும் உற்சாக சைக்கிள் பயணம்
Published on

சிறுவயதில் சைக்கிள் ஓட்டுவதற்கு ஆசைப்படாதவர்கள் எவரும் இருக்க முடியாது. சைக்கிள் ஓட்டுவதையே விளையாட்டாக கொண்டிருந்த தலைமுறையும் இருந்தது. இப்போது பொழுது போக்குக்காகவும், உடல் ஆரோக்கியத்தை பேணவும் சைக்கிள் ஓட்டுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாலும் உடல்நலம் மேம்படுவதாலும் பலர் சைக்கிள் ஓட்டுவதை தொடரவும் செய்கிறார்கள்.

இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடும் செலவை மிச்சப்படுத்துவதற்காக சைக்கிள் ஓட்டுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சிறு வயதில் சைக்கிள் ஓட்டிய ஆர்வத்தை இன்று வரை தக்கவைத்துக்கொண்டு உற்சாகமாக வலம் வருபவர்கள் சிலர்தான் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் ஜோத்ஸ்னா.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடாவில் உள்ள பாங்கிகோட்லா கிராமம் இவரது பூர்வீகம். சிறுவயதில் சிறுவர்கள் சைக்கிள் ஓட்டுவதை பார்த்து இவருக்கும் சைக்கிள் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் இவரது குடும்ப சூழ்நிலை சைக்கிள் வாங்குவதற்கு அனுமதிக்கவில்லை.

அக்கம் பக்கத்து சிறுவர்களிடம் கடன் வாங்கி சைக்கிள் ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டிருக்கிறார். பிறரிடம் சைக்கிள் கேட்பதற்கு தயங்கியதால் 14-வது வயதில்தான் சைக்கிள் ஓட்டும் கனவு நிறைவேறி இருக்கிறது.

1968-ம் ஆண்டு பெண்கள் ஓட்டும் சைக்கிள் ஒன்றை சொந்தமாக வாங்கி இருக்கிறார். அதுவரை ஆண்கள் ஓட்டும் சைக்கிளில் பயிற்சி பெற்றிருந்த நிலையில் இந்த சைக்கிள் ஓட்டுவது அவருக்கு ரொம்பவே பிடித்து போனது.

1988-ம் ஆண்டு மற்றொரு சைக்கிள் வாங்கி இருக்கிறார். அந்த சைக்கிளை இன்று வரை ஓட்டிக்கொண்டிருக்கிறார். வயது முதிர்வு காரணமாக இனி சைக்கிள் ஓட்டவேண்டாம் என்று பலரும் கூறி இருக்கிறார்கள். அதனை பொருட்படுத்தாமல் சைக்கிளில் உற்சாகமாக சுழலுகிறார். சைக்கிள் ஓட்டுவதுதான் தன்னை இன்று வரை நோய் நொடியின்றி ஆரோக்கியமாக நடமாட வைத்திருக்கிறது என்றும் சொல்கிறார்.

புடவை அணிந்து கொண்டு சிரமமின்றியும், தடுமாற்றமின்றியும் இவர் சைக்கிள் ஓட்டுவதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். ஜோத்ஸ்னா ராணுவ வீரரை திருமணம் செய்திருக்கிறார். அதனால் இயல்பாகவே உடல் நலன் மீது அக்கறை அதிகரித்திருக்கிறது. சைக்கிள் ஓட்டுவது கூடுதல் உடல் வலுவை கொடுத்துவிட்டது என்கிறார்.

ஜோத்ஸ்னா அங்கன்வாடியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இப்போது கோகர்ணாவில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருக்கிறார். அந்த கூட்டுறவு சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் பெற்றவர்.

கிராம மக்களிடையே சிறு சேமிப்பு பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி வருகிறார். அதற்கு சைக்கிளையே பயன்படுத்துகிறார். தினமும் காலையில் எழுந்ததும் ஒவ்வொரு கிராமமாக சென்று பொதுமக்களிடம் பணம் சேகரித்து கூட்டுறவு சங்கத்தில் ஒப்படைக்கும் பணியை மேற்கொள்கிறார். அதனால் சைக்கிள் ஓட்டுவது இவரது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது.

''காலையில் எழுந்ததும் தியானம் மற்றும் யோகாசனம் செய்து அன்றைய நாளை தொடங்குகிறேன். வீட்டு வேலைகளை முடித்ததும் சைக்கிள் ஓட்டிக்கொண்டு ஒவ்வொரு கிராமமாக செல்கிறேன். கிராம மக்களிடம் பணத்தை சேமிப்பதற்கான சிறந்த வழிமுறைகளை கற்றுக்கொடுக்கிறேன்.

பின்பு கூட்டுறவு சங்கத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்புகிறேன். இத்தகைய சுழற்சி வாழ்க்கை முறைதான் என்னை உடல்நல பிரச்சினைகளில் இருந்து விலக்கி வைக்கிறது. இந்த சுழற்சி முறை இல்லாவிட்டால் என் வாழ்க்கை இவ்வளவு சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்திருக்காது'' என்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com