8 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்

அடுக்குமாடி குடியிருப்பில் 8 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது. தீவைக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
8 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
Published on

புதுச்சேரி

அடுக்குமாடி குடியிருப்பில் 8 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது. தீவைக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோட்டார் சைக்கிள்கள் எரிந்தது

புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 16-வது குறுக்கு தெருவில் 4மாடி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள தரைத்தளத்தில் அங்கு குடியிருப்பவர்களின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

கடந்த 31-ந்தேதி இரவு புத்தாண்டு கொண்டாடி விட்டு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தூங்க சென்றனர். இந்தநிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் திடீரென தீப்பிடித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அங்கு குடியிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து கோரிமேடு காவல் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களும், பிற மோட்டார் சைக்கிள்களும் தப்பின. ஆனாலும் 8 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.

பட்டாசு வெடித்ததா?

இந்த சம்பவம் குறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கால்நடை மருத்துவக்கல்லூரி ஊழியரான மணிகண்டன் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து தெரியவில்லை. மேலும் அதன் தரைத்தளத்தில் கண்காணிப்பு கேமரா எதுவும் பொருத்தப்படாத நிலையில் தீவிபத்து குறித்து காவலாளி உள்ளிட்ட சிலரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தீ எரிந்த இடத்தின் அருகில் இருந்த ஜெனரேட்டர் எந்த சேதமுமின்றி தப்பியது. எனவே முன்விரோதம் காரணமாக தீவைக்கப்பட்டதா? நள்ளிரவில் பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com