ராமர் கோவில் கருவறைக்குள் திடீரென புகுந்த குரங்கு...!! அடுத்து நடந்த ஆச்சரியம்


ராமர் கோவில் கருவறைக்குள் திடீரென புகுந்த குரங்கு...!! அடுத்து நடந்த ஆச்சரியம்
x

ராமர் கோவிலின் கருவறைக்குள் தெற்கு வாசல் வழியே நுழைந்தது. இதன்பின் கடவுள் ராமர் சிலையை நோக்கி முன்னேறி சென்றது.

அயோத்தி,

உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் அமைந்த பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை, லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் தொலைக்காட்சி வழியேயும் மற்றும் அருகிலுள்ள கோவில்களில் இருந்தபடியும் கண்டு களித்தனர். விழாவில் பிரதமர் மோடி, குழந்தை ராமரின் 51 அங்குல சிலையின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார்.

அவர் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 11 நாட்கள் விரதமும் மேற்கொண்டார். இதன்பின் விழா நாளன்று அவருடைய விரதம் நிறைவடைந்தது. கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அலை அலையாக வர தொடங்கியுள்ளனர். இதனால், பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில், நேற்று மாலை சுறுசுறுப்பாக வந்த குரங்கு ஒன்று திடீரென ராமர் கோவிலின் கருவறைக்குள் தெற்கு வாசல் வழியே நுழைந்தது. இதன்பின் கடவுள் ராமர் சிலையை நோக்கி முன்னேறி சென்றது.

கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு வீரர்கள், உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர். அவர்கள் குரங்கை நோக்கி ஓடினர்.

இதுபற்றி ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், நேற்று மாலை 5.50 மணியளவில் தெற்கு வாசல் வழியே கோவில் கருவறைக்குள் நுழைந்த குரங்கு ஒன்று, உற்சவர் சிலையருகே சென்றது. விரைவாக செயல்பட்ட அந்த குரங்கை கண்டதும் கோவிலின் வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலர்கள் பதறி போனார்கள்.

அது உற்சவர் சிலையை தரையில் தூக்கி வீசிவிட கூடும் என பயந்து விட்டனர். போலீசார் அந்த குரங்கை நோக்கி ஓடியதும், அந்த குரங்கு அமைதியாக வடக்கு வாசலை நோக்கி ஓடியது.

ஆனால், அதன் கதவு மூடப்பட்டு இருந்தது. இதனால், கிழக்கு நோக்கி திரும்பி திரண்டிருந்த கூட்டத்தினரை கடந்து சென்றது. எவருக்கும் எந்தவித தீங்கும் செய்யாமல் கிழக்கு வாசல் வழியே வெளியேறியது.

குழந்தை ராமரை பார்ப்பதற்காக அனுமன்ஜியே நேரில் வந்தது போன்று தங்களுக்கு தோன்றியது என அதன்பின்னர் பாதுகாப்பு வீரர்கள் கூறினார்கள் என்று அந்த எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிதாக நிறுவப்பட்ட கோவிலில் கடவுள் ராமரை பாதுகாக்கும் பணியை அனுமன்ஜி தொடர்ந்து மேற்கொள்கிறார் என்பதற்கான அடையாளமே இந்த நிகழ்வு என பக்தர்கள் பலரும் தெரிவித்தனர்.


Next Story