அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: மொரீஷியசில் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை


அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: மொரீஷியசில் அரசு ஊழியர்களுக்கு  சிறப்பு விடுமுறை
x

கோப்புப்படம் 

ஆப்பிரிக்காவில் இந்து மதம் அதிகமாக பின்பற்றப்படும் ஒரே நாடாக மொரீஷியஸ் உள்ளது.

போர்ட் லூயிஸ்,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பல்வேறு தரப்பினருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விழாவை முன்னிட்டு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் 2,100 கிலோ எடை கொண்ட கோவில் மணி, 1,100 கிலோ எடை கொண்ட ராட்சத விளக்கு, 10 அடி உயர பூட்டு மற்றும் சாவி, ஒரே சமயத்தில் 8 நாடுகளின் நேரத்தைக் காட்டும் கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான பரிசுப் பொருட்கள் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரலையில் பார்ப்பதற்கும், வழிபாடு செய்வதற்கும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க மொரீஷியஸ் அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி, மொரீஷியஸ் நாட்டில் உள்ள இந்து மதத்தை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு வருகிற 22-ந்தேதி மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை 2 மணி நேரம் சிறப்பு விடுமுறை வழங்க அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புக்கொண்டது.

மொரீஷியசில் இந்து மதம் மிகப்பெரிய மதமாகும். ஆப்பிரிக்காவில் இந்து மதம் அதிகமாக பின்பற்றப்படும் ஒரே நாடாக மொரீஷியஸ் உள்ளது. 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 48.5 சதவீத இந்து மக்கள் அங்கு உள்ளனர்.


Next Story