சூப்பர்மேன் ரசிகர்களுக்கு நடிகர் ஹென்றி கவில் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி...
தயாரிப்பு நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் சோகமான முடிவு எடுக்கப்பட்டது என ஹென்றி கவில் குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன்,
சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களிலேயே மிகவும் புகழ் பெற்ற கதாபாத்திரமான 'சூப்பர்மேன்' கதாபாத்திரத்தை அண்மைக்காலமாக திரைப்படங்களில் ஏற்று நடித்து வந்தவர் ஹாலிவுட் நடிகர் ஹென்றி கவில். இவரது நடிப்பில் இயக்குனர் ஸாக் ஸ்னைடர் இயக்கிய 'மேன் ஆஃப் ஸ்டீல்' திரைப்படம் சூப்பர்மேன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து 'ஸ்னைடர் வெர்ஸ்' என்று அழைக்கப்பட்ட திரைப்படங்களின் வரிசையில் 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்', 'ஜஸ்டிஸ் லீக்' உள்ளிட்ட படங்களில் ஹென்றி கவில் சூப்பர்மேனாக நடித்திருந்தார். ஆனால் அதன் பிறகு இயக்குனர் ஸாக் ஸ்னைடருக்கும், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 'ஸ்னைடர் வெர்ஸ்' திரைப்பட வரிசை கைவிடப்பட்டது.
இதனால் ஹென்றி கவில் மீண்டும் சூப்பர்மேனாக நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த சந்தேகத்தைப் போக்கும் வகையில், அண்மையில் வெளியான 'பிளாக் ஆடம்' திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஹென்றி கவில் மீண்டும் சூப்பர்மேனாக தோன்றியிருந்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.
மேலும் இதனை உறுதி செய்யும் விதமாக கடந்த அக்டோபர் மாதம் நடிகர் ஹென்றி கவில், தனது இன்ஸ்டாகிராம் பதிவில், அடுத்தடுத்த படங்களில் மீண்டும் சூப்பர்மேன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஹென்றி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், இனி சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் தான் நடிக்கப்போவதில்லை எனவும், இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த சோகமான முடிவு எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஜேம்ஸ் கன், மார்வெல் யூனிவர்சுக்கு இணையாக டி.சி. யூனிவர்சை புதிய முறையில் கொண்டு செல்ல விரும்புவதால், அதில் புதிய கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் உருவாகும் என்றும், இதில் பழைய நடிகர்கள் இணைய வாய்ப்புகள் இல்லை எனவும் ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.