அம்பானி இல்ல விழா; நடனம் ஆடாததற்கு கங்கனா ரணாவத் அளித்த புது விளக்கம்


அம்பானி இல்ல விழா; நடனம் ஆடாததற்கு கங்கனா ரணாவத் அளித்த புது விளக்கம்
x

புகழ் மற்றும் பணம் வேண்டாம் என கூறுவதற்கு வலிமையான பண்பும் மற்றும் கண்ணியமும் இருக்க வேண்டும் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்து உள்ளார்.

ஜாம்நகர்,

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இடையே வருகிற ஜூலை 12-ந்தேதி திருமணம் நடைபெற முடிவாகி உள்ளது. எனினும், இதற்கு 4 மாதங்களுக்கு முன்பே கொண்டாட்டத்திற்கான விசயங்கள் தயாராகி விட்டன. குஜராத்தின் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி 3-ந்தேதி வரையிலான 3 நாட்கள் திருமணத்திற்கு முந்தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரபலங்களும் வருகை தந்தனர். பிரபல பாப் ஸ்டார் ரிஹான்னா, உலகம் முழுவதும் உள்ள பெரிய தொழிலதிபர்கள், உலக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். திரை நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ஆமீர் கான், சல்மான் கான், ஷாருக் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிரபல பாடகர்களான உதித் நாராயண், ஆரிஜித் சிங், லக்கி அலி, தில்ஜித் தோசன், ஷ்ரேயா கோஷல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பாட்டு பாடினர். தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் ஜோடி, கியாரா, கத்ரீனா உள்ளிட்டோர் மேடையில் நடனம் ஆடினர்.

இந்த கொண்டாட்டத்தில் திரை பிரபலங்களில் ஒருவரான நடிகை கங்கனா ரணாவத் நடனம் ஆடுவது உள்ளிட்ட எந்தவித செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை. இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செய்தியொன்று பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அதில், பழம்பெரும் பின்னணி பாடகியான மறைந்த லதா மங்கேஷ்கர் ஒருமுறை கூறிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இதன்படி கங்கனா வெளியிட்டு உள்ள பதிவில், நீங்கள் 50 லட்சம் டாலர் எனக்கு கொடுத்தாலும், நான் வரமோட்டேன் என திருமண நிகழ்ச்சியில் பாட லதா மங்கேஷ்கர் மறுத்த நிகழ்வை குறிப்பிட்டு உள்ளார்.

நான் நிதிசார்ந்த நெருக்கடியால் சிக்கி தவித்து வருகிறேன். ஆனால், லதாஜி மற்றும் நான் இருவர் மட்டுமே, ஹிட்டான பாடல்களை கொண்டிருக்கிறோம்.

எனினும், எவ்வளவுக்கு எவ்வளவு என்னை தூண்டி விட்டாலும் கூட, ஒருபோதும் நான் திருமண நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியது இல்லை. பல சூப்பர் ஹிட் குத்து பாடல்களுக்கான வாய்ப்புகள் கூட எனக்கு வந்தன என தெரிவித்து இருக்கிறார். புகழ் மற்றும் பணம் வேண்டாம் என கூறுவதற்கு வலிமையான பண்பும் மற்றும் கண்ணியமும் இருக்க வேண்டும்.

குறுக்கு வழியிலான இந்த உலகத்தில், ஒருவர் அடைய கூடிய ஒரேயொரு சொத்து என்னவென்றால், அது நேர்மையே என்று இளம் தலைமுறை புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.

இதனால், அம்பானி இல்ல திருமண கொண்டாட்டத்தில் திரை பிரபலங்கள் பலரும் நடனம் ஆடிய நிகழ்வை நடிகை கங்கனா ரணாவத் கேலி செய்கிறாரோ? என்பது போன்று அவரது பதிவு நெட்டிசன்களால் பார்க்கப்படுகிறது.


Next Story