'படத்தை வசூலை வைத்து இல்லாமல் கதைக்காக கொண்டாடுங்கள்' - நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா, படத்தை கதைக்காக கொண்டாடுங்கள் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை,
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' உருவாகியுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் மிக பிரமாண்ட முறையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சூர்யா, படத்தை கதைக்காக கொண்டாடுங்கள் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், 'படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது மட்டும் ஒரு படத்தை பார்ப்பதற்கு காரணமாக இருக்க கூடாது. கதாபாத்திரம் மற்றும் கதையின் அடிப்படையில் படத்தைப் பார்க்கவும். வசூலை வைத்து படத்தை கொண்டாடாமல் கதைக்காக கொண்டாடுங்கள்', என்றார்.
தற்போது 'மெய்யழகன்' படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.