திருமணத்திற்கு முன்பே கருமுட்டையை உறைய வைத்த தனுஷ் பட நடிகை; வீடியோ பகிர்வு


திருமணத்திற்கு முன்பே கருமுட்டையை உறைய வைத்த தனுஷ் பட நடிகை; வீடியோ பகிர்வு
x

எப்போது திருமணம் என்று இதுவரை முடிவு செய்யாததால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தனது கரு முட்டைகளை உறைய வைத்துள்ளதாக நடிகை மெஹ்ரீன் பகிர்ந்துள்ளார்.

திரைத்துறையில் நடிகர், நடிகைகள் தாமதமாகவே திருமணம் செய்து கொள்ளும் போக்கு நிலவி வருகிறது. பட வாய்ப்பு, புகழ், சூழ்நிலை எனப் பல காரணங்களை இதற்கு சொல்லலாம். சில முன்னணி நடிகர், நடிகைகள் நாற்பது வயதைக் கடந்திருந்தும் திருமணம் செய்யாமல் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில், நடிகர் தனுஷூடன் 'பட்டாஸ்' படத்தில் ஜோடியாக நடித்த நடிகை மெஹ்ரீன் தனக்கு எப்போது திருமணம் என்று இதுவரை முடிவு செய்யாததால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது கரு முட்டைகளை உறைய வைத்து, பாதுகாத்து வருவதாக கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இது பற்றி வீடியோவைப் பகிர்ந்துள்ள நடிகை மெஹ்ரீன், 'கடந்த 2 வருடங்களாக இதைச் செய்வதற்கு என்னை மனதளவில் தயார் படுத்திய பின்பு இதை செய்து முடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. என்னுடைய இந்த தனிப்பட்ட விஷயத்தை பகிரலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், என்னைப் போன்ற எத்தனையோ பெண்கள் எப்போது திருமணம் செய்துகொள்வது அல்லது குழந்தை பெற்றுக்கொள்வது என்று இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறார்கள்.

எதிர்காலத்திற்காக உங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்றும் நான் நினைக்கிறேன். பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க எல்லாப் பெண்களும் இதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இது 'தடைசெய்யப்பட்ட' விஷயமாக கருதப்படுவதால், இதைப் பற்றி நான் அதிகம் பேசுவதில்லை. தொழில்நுட்பத்தின் உதவியுடன், நம்மால் சிறந்த முடிவுகளை எடுக்க முடிகிறது.

தாயாக வேண்டும் என்பது எனது கனவு. என் திருமணம் இன்னும் சில வருடங்கள் தாமதமாகி விட்டால் அந்த கனவு நிறைவேறுவதில் சிக்கல் இருக்குமா என்பது தெரியவில்லை. அதனால்தான் இந்த முடிவு. இது சில சமயம் என்னைக் காயப்படுத்தியது. நிறைய சவால்கள் நிறைந்ததாக இருந்தது. குறிப்பாக ஊசி, ரத்தம் மற்றும் மருத்துவமனைகளின் மீது எனக்கிருக்கும் பயம் அதிகம்.

நான் மருத்துவமனைக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் மயக்கம் அடைந்தேன். அனைத்து ஹார்மோன் ஊசிகளாலும் நீங்கள் அனுபவிக்கும் தொடர்ச்சியான உணர்ச்சிக் கொந்தளிப்பு எளிதானது அல்ல. ஆனால் இத்தனை வலிகளும் நிச்சயம் மதிப்பிற்குரியது. நீங்கள் எதைச் செய்யத் தேர்ந்தெடுத்தாலும், அதை உங்களுக்காகச் செய்யுங்கள்! இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்த என் அம்மா, மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி' எனக் கூறியுள்ளார்.


Next Story