'டைட்டானிக்' போல 'டைட்டன் விபத்து' சினிமா படமாகிறது


டைட்டானிக் போல டைட்டன் விபத்து சினிமா படமாகிறது
x

‘டைட்டானிக்' போல டைட்டன் நீர்மூழ்கி விபத்தை படமாக்க இருப்பதாக பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் இ பிரையன் டாபின்ஸ் அறிவித்துள்ளார்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டில் வெளியான 'டைட்டானிக்' படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

'டைட்டானிக்' கப்பல் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் மூழ்கி உயிர் சேதத்தை ஏற்படுத்திய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாராகி இருந்தது. இந்த நிலையில் கடலின் ஆழத்தில் இருக்கும் 'டைட்டானிக்' கப்பலின் சிதிலமடைந்த பாகங்களை பார்க்க 'டைட்டன்' என்ற நீர்மூழ்கியில் சென்ற 5 பேர் கொண்ட குழுவினர் உயிரிழந்தனர். டைட்டானிக் போல டைட்டன் நீர்மூழ்கி விபத்தையும் ஜேம்ஸ் கேமரூன் படமாக்க போவதாக செய்திகள் வெளியானது. இதனை ஜேம்ஸ் கேமரூன் மறுத்தார்.

இந்த நிலையில் டைட்டன் நீர்மூழ்கி விபத்தை படமாக்க இருப்பதாக பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் இ பிரையன் டாபின்ஸ் அறிவித்துள்ளார்.

மைண்ட்ரியாட் பட நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த படத்துக்கு 'சால்வேஜ்டு' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இதுகுறித்து இணை தயாரிப்பாளர் ஜோனதன் கீசே கூறுகையில், "டைட்டன் நீர்மூழ்கி விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே ஏற்றுக்கொண்டு வருகிறோம். ஆனால் உண்மையை அறிய வேண்டியது அனைவரின் உரிமை ஆகும். அதை இந்த படத்தின் மூலமாக எடுத்துக்காட்ட போகிறோம்'', என்றார்.


Next Story