திரைப்பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட 'ரங்கோலி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்..!
பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள 'ரங்கோலி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சென்னை,
கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபுரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரித்துள்ள திரைப்படம் 'ரங்கோலி'. இந்த படத்தை இயக்குனர் வசந்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். 'மாநகரம்', 'தெய்வ திருமகள்' ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
மேலும் பிரார்த்தனா, சாய் ஸ்ரீ, அக்ஷயா, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். ஐ.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.சத்தியநாராயணன் படத்தொகுப்பு செய்கிறார்.
பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு, நடிகர்கள் அருண் விஜய், அதர்வா முரளி, சதீஷ், நவீன் சந்திரா மற்றும் கார்த்திக் ரத்னம், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் நடிகை வாணி போஜன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.