8 நகரங்களுக்கு செல்லும் 'பொன்னியின் செல்வன் 2' நடிகர்கள்


8 நகரங்களுக்கு செல்லும் பொன்னியின் செல்வன் 2 நடிகர்கள்
x

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ந் தேதி திரைக்கு வர இருப்பதால், அதை நடிகர், நடிகைகளை கொண்டு விளம்பரப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் 27-ந் தேதி வரை தனி விமானத்தில் பல்வேறு நகரங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். நேற்று மாலை தனி விமானத்தில் கோவை சென்றனர்.

இன்று (திங்கட்கிழமை) சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். தொடர்ந்து டெல்லி, கொச்சின், பெங்களூரு, ஐதராபாத், மும்பை, திருச்சி நகரங்களுக்கு சென்று படத்தை விளம்பரப்படுத்துகின்றனர்.

பொன்னியின் செல்வன் படம் பற்றி படத்தில் இடம்பெறாத தனி பாடலை ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கி உள்ளார். சிவா ஆனந்த் எழுதி உள்ளார். இந்த பாடல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது. நடிகர், நடிகைகள் பாடலை வெளியிட்டனர். விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, "பொன்னியின் செல்வன் படத்தில் எனக்கு பலரை காதலிக்கும் வந்தியத்தேவன் கதாபாத்திரம் கிடைத்தது மகிழ்ச்சி. நானும், ஜெயம் ரவியும் நெருங்கிய நண்பர்கள். விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுவார். அவருடைய ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல் பகுதியில் எனக்கும், திரிஷாவுக்கும் ஒரு காதல் காட்சி சூப்பராக இருந்தது. அதுபோலவே, 2-ம் பாகத்திலும் இருக்கும்" என்றார்.

திரிஷா பேசும்போது, "பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தில் அதிகமான வெறித்தனம் கொண்ட சண்டைக் காட்சிகள் இருக்கும். திரையரங்கில் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

விழாவில் விக்ரம், ஏ.ஆர்.ரகுமான், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் பேசினர்.

1 More update

Next Story