சிந்தாமணிக்கு வந்த சிவாஜி


சிந்தாமணிக்கு வந்த சிவாஜி
x

பாகப்பிரிவினை படத்தின் 100-வது நாளையொட்டி, சிந்தாமணி தியேட்டருக்கு 12-2-1960 அன்று சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, நடிகை சரோஜாதேவி ஆகியோர் வருகிறார்கள் என்று தினத்தந்தியில் வெளியாகி இருந்த விளம்பரம்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பாகப்பிரிவினை 31-10-1959 அன்று வெளியானது. அந்தப் படம் மதுரை சிந்தாமணியில் 216 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. தமிழ்நாட்டில் சென்னை மட்டுமின்றி, நெல்லை ரத்னா டாக்கீஸ், திண்டுக்கல் என்.வி.ஜி.பி. டாக்கீஸ் உள்பட பல ஊர்களின் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.

5-2-1960-ந் தேதிவரை அந்தப் படத்தை மதுரை சிந்தாமணியில் 3 லட்சத்து 72 ஆயிரத்து 446 பேர் பார்த்து ரசித்து இருக்கிறார்கள். அதே தேதி வரை 2 லட்சத்து 29 ஆயிரத்து 60 ரூபாய் 58 பைசா வசூல் குவித்ததாக துல்லியமாக சிந்தாமணி தியேட்டர் நிர்வாகம் சார்பில் விளம்பரமும் செய்துள்ளார்கள்.



மதுரை சிந்தாமணி திரையரங்கில் 12-2-1960 அன்று நடந்த பாகப்பிரிவினை பட ெவற்றி விழாவிற்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, நடிகை சரோஜாதேவி ஆகியோர் நேரில் வந்து ரசிகர்களை சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர்.

அதேபோன்று சிவாஜியின் 200-வது படமான திரிசூலம் சிந்தாமணியில் ரிலீஸ் செய்யப்பட்டு, 200 நாட்கள் ஓடியது. இந்த படத்தின் வெற்றி விழாவை தியேட்டரில் கொண்டாடினர். அந்த விழாவுக்கு சிவாஜி கணேசன், தனது குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டார். பச்சைவிளக்கு, பாசமலர், தில்லானா மோகனாம்மாள், கவுரவம் என சிவாஜி படங்கள் பலவும் அங்கு வெற்றிகரமாக ஓடியுள்ளன.

சரத்குமார் - தேவயானி நடித்த சூரியவம்சம் படம் 175 நாட்கள் ஓடியுள்ளது. இதை கொண்டாடும் வகையில், அந்த நாளில் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு உணவு விருந்து அளித்தனர் என 79 வயதான சிவாஜி ரசிகர் சிவநாத்பாபு ெதரிவித்தார்.


Next Story