மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை: முக்கூடல் த.பி.சொக்கலால் டாக்கீஸ்


மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை: முக்கூடல் த.பி.சொக்கலால் டாக்கீஸ்
x

சொக்கலால் தியேட்டரில் எப்போதும் 25-க்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள் தங்கி இருப்பார்கள்.

தஞ்சை பிரகதீஸ்வரரைவிட பெரியகோவில் கட்டிய ராஜராஜ சோழனைப் பெரிதாகப் பேசுவது போல், இங்கே முக்கூடல் த.பி.சொக்கலால் டாக்கீசைவிட அதன் உரிமையாளர் அரிராம்சேட் பற்றியே அதிகம் பேச இருக்கிறோம்.

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, கருணையாறு, உள்ளாறு ஆகிய 3 ஆறுகளும் சங்கமிக்கும் இடம்தான் முக்கூடல்.

அது ஒரு சிற்றூராக இருந்தாலும் ஒருநேரத்தில் சென்னை கோடம்பாக்கத்துக்கு இணையாக திரைத்துறையினர் நட(ன)மாடிய பேரூராகத் திகழ்ந்தது.

அந்த அரிய தகவல்களை இங்கே காண்போம்.

முக்கூடலைச் சேர்ந்தவர், த.பி.சொக்கலிங்கம். அவருடைய தாய் மாமன்மார்கள் பம்பாய் (இன்றைக்கு மும்பை) நகரில் வசித்து வந்தனர். அவர்களைப் பார்ப்பதற்கு பம்பாய் சென்ற, சொக்கலிங்கம் அங்கு பிரபலமாக இருந்த பீடித் தொழிலைக் கற்றுக்கொண்டு வந்தார். பம்பாய் நகரில் அப்போது ஆண்கள் மட்டுமே பீடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கம்பெனிகளுக்கு நேரில் சென்று பீடிசுற்றும் வேலையை செய்துவந்தார்கள்.

சொக்கலிங்கம் அதில் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்தார்.

பீடிசுற்றும் தொழிலை தனது சொந்தக் கிராமமான முக்கூடலில் முதல் முறையாக பெண்கள் மத்தியில் அறிமுகம் செய்தார். அவரவர் வீடுகளில் இருந்தபடியே பீடி சுற்றும் வேலையைச் செய்ய வழிவகை செய்தார்.

இப்போது வீட்டில் இருந்தபடி வேலை (ஒர்க் பிரம் ஹோம்) என்கிறார்களே, அதை தமிழ்நாட்டில் முதன்முதலில் அறிமுகம் செய்தவர் அவராகத்தான் இருக்கக்கூடும்!

இத்தொழில் பெண்களை சொந்தக்காலில் நிற்க உதவியது. பெண்களின் சுயவருவாயில் புரட்சியை ஏற்படுத்தியது.

முக்கூடல் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் பீடி சுற்றும் தொழில் பரவியது. வருமானம் கொட்டத் தொடங்கியது. அவர் பீடிச் சக்கரவர்த்தியாக உயர்ந்தார். சொக்கலிங்கமாக இருந்தவர் த.பி.சொக்கலால் சேட் என்று பெயர் பெற்றார். இவ்வாறு உழைப்பால் உயர்ந்த தொழில் அதிபர் சொக்கலால் 1942-ம் ஆண்டு தனது 54-வது வயதில் மரணம் அடைந்தார்.

அவருக்குப் பிறகு தொழிலை மகன் அரிராம் சேட் கவனிக்க வேண்டும். ஆனால் அவரோ அப்போது ஏழு, எட்டு வயது விளையாட்டுப் பிள்ளை! அதனால் சொக்கலாலின் மைத்துனர் அரிகெங்காராம் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்தார். 1944-ம் ஆண்டு முக்கூடலில், சொக்கலால் நினைவாக, த.பி.சொக்கலால் டாக்கீஸ் என்ற பெயரில் டூரிங் கொட்டகை ஒன்றைக் கட்டினார்கள்.

30 நாற்காலிகள், 40 பேர் அமர்ந்திருக்கும் வகையில் பெஞ்சுகள், முன்னால் நூற்றுக்கணக்கானவர் அமர்ந்து படம் பார்க்க வசதியாக தாமிரபரணி ஆற்று மணல் பரப்பியத் தரை. இவ்வாறாய் அமைந்த தியேட்டரில் மிகச்சிறந்த புரஜெக்டர் ஒளிபரப்பு கருவியும் (வெஸ்ட்ரெக்ஸ்), சிகாகோ ஆம்பிளிபியரும் அந்தக் காலத்திலேயே பயன்படுத்தி உள்ளனர்.

நாளடைவில் அரிராம்சேட், அரிகெங்காராமுடன் சேர்ந்து தியேட்டர் நிர்வாகத்தைக் கவனிக்கத் தொடங்கினார். பீடி தொழிலிலும் ஆர்வம் காட்டினார். இசைப் பாடல், நாடகம், சினிமா என்று கலைத்துறையிலும் அவருக்கு அதிக நாட்டம் இருந்தது. தமிழ்ச் சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.டி. என்று அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதரின் நட்புக் கிடைக்கவே அவரைக் குருவாகக் கொண்டு இசையைக் கற்றார். எம்.கே.டி.யுடன் இணைந்து கச்சேரிகளில் பாடினார். அவருக்கு இயல்பாய் அமைந்த ஈகைக் குணத்தால் இளம் வயதிலே, அரசியல் தலைவர்கள், சினிமா கலைஞர்களென அனைவர் உள்ளங்களையும் எளிதாகக் கவர்ந்தார்.

வள்ளல்கள் வாரி, வாரிக் கொடுப்பார்கள், அள்ளி, அள்ளி இறைப்பார்கள் என்று படித்திருப்போம். அதை நடைமுறையில் அரிராம்சேட் கடைப்பிடித்தார்.

"முதலாளிகள் என்ற பெயரில் எத்தனையோ பேர்கள் இருப்பார்கள்; ஆனால், உங்களைப் போல், தொழிலாளர்கள் மீது அன்பும் அரவணைப்பும் கொண்ட முதலாளிகளை எங்கேயும் பார்க்க முடியாது!" என்று, ஒருமுறை முக்கூடல் வந்தபோது அவரை, பெருந்தலைவர் காமராஜர் பாராட்டி இருக்கிறார். இதுபோன்று அரசியல், அதிகாரம், செல்வாக்கு இருந்தபோதும் தியேட்டர் நிர்வாகத்தை நேர்மையாகவே நடத்திவந்தார்.

சினிமா கொட்டகைகளின் உரிமம் புதுப்பிக்க வரும் உரிமையாளர்களிடம் "சொக்கலால் தியேட்டரைச் சென்று பார்த்துவிட்டு வாருங்கள்" என்று கலெக்டர், தாசில்தார் போன்ற அதிகாரிகள் சொல்வது உண்டாம். அந்த அளவில் டூரிங் கொட்டகையாக இருந்தாலும்கூட அதை முன்மாதிரியாக நடத்திவந்து இருக்கிறார்கள்.

த.பி.சொக்கலால் நிர்வாகத்தினர் வேனில், ஊர், ஊராகச் சென்று பீடி விளம்பரம் செய்துவந்ததுடன், சினிமாப் படங்களை திரையிட்டும் வந்தார்கள். தென் மாவட்டங்களில் முதன்முதலாக சினிமாவை கிராமங்களின் வாசல்களுக்குக் கொண்டு போய்ச் சேர்த்த பெருமை அவர்களையே சேரும்.

சொக்கலால் தியேட்டரில் எப்போதும் 25-க்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள் தங்கி இருப்பார்கள். பட்டி, தொட்டிகளுக்குச் சென்று பீடி கம்பெனிக்கு விளம்பரம் செய்வார்கள். முக்கூடல் நாராயண சுவாமி கோவில் திருவிழா கலைநிகழ்ச்சிக்கு வரும் நடிகர், நடிகைகள் இந்த தியேட்டரில் தங்கி இருந்து ஒத்திகை பார்ப்பார்கள். எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், நடிகர் திலகம் சிவாஜி உள்ளிட்டோரும் இங்கு வந்து ஒத்திகை பார்த்து உள்ளனர்.

இங்கு வராத நடிகர், நடிகைகளே இல்லை. எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா, நடிகைகள் லலிதா, பத்மினி, ராகினி (திருவாங்கூர் சிஸ்டர்ஸ்), ராஜ சுலோச்சனா, குசலகுமாரி, சச்சு, பாடகர்கள் எம்.எல்.வசந்தகுமாரி, டி.கே.பட்டம்மாள், ஏ.எம்.ராஜா, ஜிக்கி, பி.லீலா, பி.சுசீலா, ஏ.எல்.ராகவன், டி.எம்.சவுந்தரராஜன், கே.பி.சுந்தராம்பாள், இசைஅமைப்பாளர் ஜி.ராமநாதன், உடுமலை நாராயணகவி உள்ளிட்ட திரையுலக பட்டாளமே முக்கூடலில் சங்கமித்து இருக்கிறது.

அதற்கு காந்த சக்தியாக விளங்கி, இளம் வயதிலேயே அளப்பரிய சாதனைகள் புரிந்த அரிராம் சேட், 1964-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந்தேதி தனது 30-வது வயதில் மரணம் அடைந்தார்.

அப்போது சொக்கலால் டாக்கீசில் ஸ்ரீதரின் ''நெஞ்சம் மறப்பதில்லை'' சினிமா ஓடிக்கொண்டிருந்தது.

ஆம்! அந்த நாளை, அந்தப் பகுதி மக்களின் நெஞ்சங்களாலும் மறக்க முடியாமலே போனது. இன்னமும் அவர்களது நெஞ்சங்களில் அரிராம்சேட் நிறைந்தேதான் இருக்கிறார்.


Next Story