பிரமாண்டமாக நடைபெற்ற அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா


பிரமாண்டமாக நடைபெற்ற அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா
x
தினத்தந்தி 27 Dec 2023 8:39 AM GMT (Updated: 27 Dec 2023 11:59 AM GMT)

அயலான் படத்தின் பிஜிஎம் பணிக்காக தன்னுடைய முயற்சி 5 மடங்காக இருந்தது என்று ஏ.ஆர். ரகுமான் தெரிவித்தார்.

சென்னை,

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்'தான் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்த படத்தின் முதல் பாடல் 'வேற லெவல் சகோ' கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது. கிராபிக்ஸ் பணிகள் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்த நிலையில், வருகிற பொங்கலை முன்னிட்டு 'அயலான்' படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்தது. சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் அயலா அயலா வெளியாகி வைரலானது.

இந்நிலையில், சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் சிவகார்த்திகேயன், படத்தின் இயக்குனர் ஆர். ரவிக்குமார், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஜெயம் ராஜேஷ் , உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜெயம் ராஜேஷ் தெலுங்கு சினிமாவில் பாகுபலி , கன்னட சினிமாவில் கேஜிஎப் போன்று தமிழ் சினிமாவில் அயலான் படம் கண்டிப்பாக இருக்கும் என பேசினார்.

அதேபோல் அயலான் படம் குறித்து பேசிய ஏ.ஆர். ரகுமான் , 'ஹாலிவுட் படங்களான ட்ரான்ஸ்பார்மர், பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் உள்ளிட்ட படங்களின் தரத்தை அயலான் படம் எட்டியுள்ளது. அயலான் படத்தின் பிஜிஎம் பணிக்காக என்னுடைய முயற்சி 5 மடங்காக இருந்தது. இதற்காக 2 மாதங்களாக உழைத்துள்ளேன்' என்றார்.

இந்த படத்தின் டிரெய்லர் ஜனவரி 5 ஆம் தேதி வெளியாகும் என்று அயலான் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


Next Story