விமல் நடிக்கும் மா.பொ.சி. படத்திற்கு வந்த சிக்கல்


விமல் நடிக்கும் மா.பொ.சி. படத்திற்கு வந்த சிக்கல்
x
தினத்தந்தி 13 April 2024 2:36 AM GMT (Updated: 13 April 2024 5:14 AM GMT)

மா.பொ.சி. படத்தின் தலைப்பிற்கு எதிர்ப்பு வந்துள்ளது.

சென்னை,

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் மா.பொ.சி. இதில், கன்னி மாடம் படத்தில் நடித்த ஸ்ரீ ராம் கார்த்திக், சாயா தேவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சித்து குமார் இசைப்பணிகளை மேற்கொள்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. வாத்தியார் கெட்டப்பில் விமல் நடித்துள்ளார். பள்ளிக்கூடத்தில் கல்வியை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதுபோல் தெரிகிறது. மேலும் போஸ்டரில் விமல் முகத்தில் ரத்தக் கறையுடன் கையில் சாக்பீஸுடன் இடம்பெறுகிறார்.

இந்நில்லையில், மா.பொ.சி. படத்தின் தலைப்பிற்கு சிக்கல் வந்துள்ளது. அதன்படி மா.பொ.சி.-யின் பேத்தி பரமேஸ்வரி, படத்தின் தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது வலைதளபக்கத்தில், "மா.பொ.சி படத்தின் போஸ்டரைப் பார்த்தேன். தமிழுக்குத் தொண்டாற்றியவர்களை நீங்கள் மதிக்க வேண்டாம், ஆனால் ஏன் இப்படி அவமதிக்கிறீர்கள்? நாடறிந்த ஒரு தலைவரை, எல்லைப் போராட்ட வீரரை அவருடைய பெயரைப் பயன்படுத்திக்கொண்டு, அவருடைய கதையில்லையென்று சொல்லலாமா? அவருடைய குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க வேண்டுமென்று தெரியாதா?

மா.பொ.சி படக்குழு தலைப்பை 'மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்' என்று சொல்கிறார்கள். ஆனால், மாங்கொல்லை மயிலாப்பூரிலிருக்கும் ஒரு பகுதிதான். தாத்தாவின் பெயரான பொன்னுசாமி, பொன்னரசனாகியுள்ளது. கடைசிப் பெயர் சிவஞானம். எப்படிப் பார்த்தாலும் இது தாத்தா பெயர்தான்.

நாளையே தாத்தாவோட பயோபிக்கை எடுக்க நினைத்தால், நாங்க என்ன தலைப்பு வைக்கிறது? அதனால்தான், இந்தத் தலைப்புக்கு நாங்க எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு. ஆனால், அவருடைய பெயரைத் தவறான முறையில் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இது தாத்தாவை அவமானப்படுத்தும் செயல்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Next Story