குறட்டையை மையப்படுத்தி தயாராகும் 'குட் நைட்'

இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘குட் நைட்’. இப்படத்தில் 'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
குறட்டையை மையப்படுத்தி தயாராகும் 'குட் நைட்'
Published on

அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'குட் நைட்'. இதில் 'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குனரும், நடிகருமான பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர்.

'குட் நைட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் மணிகண்டனின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசியதாவது, '' குறட்டையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் இடம் பிடித்திருக்கிறது. தூங்கும் போது ஒருவர் விடும் குறட்டை, எப்படி மற்றவர்களை பாதிக்கிறது என்பதை நகைச்சுவையாகவும் அர்த்தமுள்ள கதையாகவும் உருவாக்கி இருக்கிறோம்'' என்றார் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com