இந்திய மாடல் அழகியுடன் டைட்டானிக் நடிகர் காதல்?
இந்திய வம்சாவளி மாடல் அழகி நீலம் கில் ஹாலிவுட்ர் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ காதலிப்பதாக இணையதளத்தில் தகவல் பரவி உள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற டைட்டானிக் படத்தில் நடித்து முன்னணி ஹாலிவுட் நடிகராக உயர்ந்தவர் லியோனார்டோ டிகாப்ரியோ. இவருக்கு தற்பொது 48 வயது ஆகிறது. இந்த நிலையில் டிகாப்ரியோவும், இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்த மாடல் அழகியான 28 வயது நீலம் கில்லும் காதலிப்பதாக இணையதளத்தில் தகவல் பரவி உள்ளது.
இருவரும் லண்டனில் உள்ள சில்டர்ன் பயர் ஹவுஸ் என்ற இடத்தில் ஜோடியாக உணவு சாப்பிட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிறது. அப்போது டிகாப்ரியோவின் தாயார் இர்மெலின் இண்டன்பிர்கென் மற்றும் நண்பர்கள் சிலரும் உடன் இருந்துள்ளனர். இதை வைத்தே இருவரும் காதலிப்பதாக பேசுகிறார்கள்.
இது தவிர சமீபத்தில் கேன்ஸ் படவிழாவுக்கு தனது கில்லர்ஸ் ஆப் தி பிளவர்ஸ் படத்தை திரையிட டிகாப்ரியோ சென்று இருந்தார். அங்கும் டிகாப்ரியோவும், மாடல் அழகி நீலம் கில்லும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. நீலம் கில் 14 வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்தார். பல பெரிய நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராகவும் இருக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் ஹாலிவுட்டில் பேசுபொருளாக மாறி உள்ளது.