குடும்ப பாசமுள்ள பொறுப்பான இளைஞர், பாசத்துக்குரிய தங்கையின் திருமண சிக்கல்கள் - படம் நம்ம வீட்டு பிள்ளை விமர்சனம்


குடும்ப பாசமுள்ள பொறுப்பான இளைஞர், பாசத்துக்குரிய தங்கையின் திருமண சிக்கல்கள் - படம் நம்ம வீட்டு பிள்ளை விமர்சனம்
x
தினத்தந்தி 30 Sep 2019 4:11 AM GMT (Updated: 30 Sep 2019 4:11 AM GMT)

குடும்ப பாசமுள்ள பொறுப்பான இளைஞர். அவருடைய பாசத்துக்குரிய தங்கையின் திருமணத்தை (சிக்கல்களில் இருந்து மீட்டு) எப்படி நடத்துகிறார்? என்பது கரு. படம் "நம்ம வீட்டு பிள்ளை" படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

கதையின் கரு:  சிவகார்த்திகேயனின் தந்தை சமுத்திரக்கனி, தாய் அர்ச்சனா, தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ். சிவகார்த்திகேயன் சிறுவனாக இருந்தபோதே சமுத்திரக்கனி எதிரிகளின் சதியால் மின்சாரம் தாக்கி பலியாகிறார். அதனால் தங்கை ஐஸ்வர்யா ராஜேசுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பது சிவகார்த்திகேயனின் கடமை ஆகிறது.

ஏழ்மையான குடும்பம் என்பதாலும், ஐஸ்வர்யா ராஜேசின் பிறப்பு ரகசியம் தெரிந்ததாலும் முறை மாப்பிள்ளைகள் பின்வாங்குகிறார்கள். விரக்தி அடைகிற ஐஸ்வர்யா ராஜேஷ், முரடரான நட்ராஜை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கும், நட்ராஜுக்கும் இடையே முன்விரோதம் இருக்கிறது. சிவகார்த்திகேயன் மீதான பகையை தீர்த்துக்கொள்ளவே அவருடைய தங்கை ஐஸ்வர்யா ராஜேசை திருமணம் செய்ததாக கூறி, நட்ராஜ் பழிவாங்கும் படலத்தை தொடங்குகிறார்.

சிவகார்த்திகேயனும், அவருடைய மாமா மகள் அனு இமானுவேலுவும் காதலிக்கிறார்கள். இந்த காதலுக்கும் ஏழ்மையும், அந்தஸ்தும் குறுக்கே நிற்கிறது. தங்கை திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களையும், தன் திருமணத்தில் ஏற்பட்ட சிக்கல்களையும் சிவகார்த்திகேயன் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்? என்பதே ‘நம்ம வீட்டு பிள்ளை’யின் கதை.

தமாஷ் நாயகனாகவும், அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாகவும் முந்தைய படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு எல்லா தரப்பினருக்கும் பிடிக்கிற மாதிரி, ஒரு கதாபாத்திரம். பொறுப்புள்ள குடும்பத்து இளைஞர் வேடம். இதன் மூலம் படம் பார்க்கும் அனைவரின் ஆதரவையும் அள்ளிக் கொள்கிறார். பாதி படம் வரை கேலியும், கிண்டலுமாக வந்து போகும் அவர், மீதி படத்தில், தங்கை பாசம், அது தொடர்பான குடும்ப உறவுகளின் புறக்கணிப்புகள், தங்கையை வாழவைக்க அவமானங்களை சகித்துக்கொள்வது, மைத்துனரை காப்பாற்ற போராடுவது என நிறைய கடமைகளை சுமந்து, சாதித்து இருக்கிறார்.

தங்கையின் வாழ்வுக்காக ஊர் பொதுமக்கள் மத்தியில் தரையில் முட்டி போட்டு மன்னிப்பு கேட்கும் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில், நெகிழவைத்து விடுகிறார். இவருக்கும், அனு இமானுவேலுக்குமான காதலும், டூயட்டும் ஈர்க்கவில்லை. ‘பிளாஷ்பேக்’ காட்சியில், ஐஸ்வர்யா ராஜேஷ் உருக்கமாக நடித்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு தாத்தாவாக பாரதிராஜா சில சீன்களில், நடிப்பு ராஜா. “தோற்பதற்கு தயாராக இருப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது” என்று சாபம் கொடுத்தது போல் பேசிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறும் காட்சி, ஒரு உதாரணம். அம்மா வேடத்தில் அர்ச்சனா, சிறந்த நடிகை என்பதை பல காட்சிகளில் நிரூபித்து இருக்கிறார். பாரதிராஜா குடும்பத்தின் மூத்த மகனாக வேல.ராமமூர்த்தி அப்பாவிடம் சீறுகிற இடத்தில், மண்ணின் மைந்தன். இரண்டாவது மகனாக நட்புக்கு இலக்கணமாக இருக்கும் ஒரு அனுதாபகரமான பாத்திரத்தில் சமுத்திரக்கனி, அவருடைய இஸ்லாமிய நண்பராக ஆர்.கே.சுரேஷ், தொழில் அதிபராக ‘ஆடுகளம்’ நரேன், சொந்த அண்ணன் மகனிடமே வட்டிக்கு கடன் கொடுக்கும் பஞ்சு சுப்பு, தாய் மாமாவாக சண்முகராஜன், ‘வழக்கு எண்’ முத்துராமன் என கதையில் நிறைய உறவுகள். கலகலப்புக்கு சூரி. அவ்வப்போது வசன காமெடி மூலம் சிரிக்க வைக்கிறார்.

இவர்கள் யார்-யார், என்ன உறவுகள்? என்பதை ஆரம்ப காட்சியிலேயே அறிமுகப்படுத்தி விடுகிறார், பாரதிராஜா. இருப்பினும் நிறைய நடிகர்கள் என்பதால் யாருக்கு யார் என்ன உறவு? என்பதில் குழப்பம் ஏற்படுவது, நிஜம். டி.இமான் இசையில், 2 பாடல்கள், இனிமை. பின்னணி இசை, காட்சிகளுக்கு உயிரோட்டமாக அமைந்து இருக்கிறது. பாடல் காட்சிகளை படமாக்கி இருப்பதில், நீரவ்ஷாவின் கேமரா ஜாலம் காட்டியிருக்கிறது.

பாண்டிராஜ் டைரக்டு செய்து இருக்கிறார். உறவுகளின் இயல்புகளையும், சுபாவங்களையும் பாசாங்கு இல்லாமல் காட்சிப்படுத்தி இருக்கிறார். வசன வரிகள், பல இடங்களில் வருடிக்கொடுக்கின்றன. உறவுகளின் மேன்மையை சொன்ன ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வாசனை, இந்த படத்தில் நிறைய...

Next Story