அரியவன்: சினிமா விமர்சனம்


அரியவன்: சினிமா விமர்சனம்
x
நடிகர்: ஈஷான் நடிகை: பிரணாலி  டைரக்ஷன்: மித்ரன் ஆர்.ஜவஹர் இசை: வி.வி. ஒளிப்பதிவு : விஷ்ணு ஸ்ரீ

கபடி வீரர் ஈஷானுக்கும் ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த பிரணாலிக்கும் காதல் மலர்கிறது. டேனியல் பாலாஜி சில இளைஞர்கள் மூலம் இளம்பெண்களை காதல் என்ற போர்வையில் ஏமாற்றி படுக்கையில் நாசம் செய்து வீடியோ எடுக்கிறார்.

அந்த வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி பிரபலங்களுக்கும் பெண்களை சப்ளை செய்கிறார். அந்த கும்பலிடம் பிரணாலியின் தோழியும் சிக்கி தற்கொலைக்கு முயல்கிறார்.

தோழிக்கு உதவ காதலன் ஈஷானை நாடுகிறார் பிரணாலி. காதல் பெயரில் ஏமாற்றிவன் கையை ஈஷான் வெட்டுகிறார். இளம்பெண்களின் பாலியல் வீடியோக்களையும் கைப்பற்றுகிறார்.

இதனால் ஈஷானை கொலை செய்ய டேனியல் பாலாஜி ஆட்களை இறக்குகிறார்.

அவர்களிடம் இருந்து ஈஷான் எப்படி தப்புகிறார். பாதிக்கப்பட்ட பெண்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.

புதுமுக நாயகன் இஷான் ஒவ்வொரு காட்சியிலும் ஆர்ப்பாட்டம் இல்லாத யதார்த்த நடிப்பை வழங்கி இருக்கிறார். வில்லன்களை அடித்து நொறுக்கும் சண்டை காட்சிகளில் வேகம்.

நாயகி பிரணாலிக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதாபாத்திரம் அதை நன்றாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளார். காதல் காட்சிகளிலும் கவர்கிறார்.

வில்லனாக வரும் டேனியல் பாலாஜி தன்னுடைய வழக்கமான ஸ்டைலிஷ் வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ரமா, சுப்பிரமணி வரும் காட்சிகள் நிறைவு.

சத்யன் சிரிக்க வைக்க முயன்றுள்ளார். கல்கி ராஜா, ரமேஷ் சக்ரவர்த்தி, காவ்யா, ரவி வெங்கட்ராமன் ஆகியோரும் உள்ளனர்.

'அனார்கலி' பாடலில் இசையமைப்பாளரின் உழைப்பும் ரசனையும் தெரிகிறது. வி.வி.யின் பின்னணி இசையும் பலம். விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவு படத்துக்கு வலுசேர்த்து இருக்கிறது.

ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பிற்பகுதியில் வேகம். கிளைமாக்ஸ் கைதட்ட வைக்கிறது.

கதாபாத்திரங்கள், காட்சி அமைப்பு, திரைக்கதையை வித்தியாசப்படுத்தி விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தி உள்ளார் இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் படம் இருந்ததும் பாராட்டுக்குரியது.


Next Story